search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னையன்
    X
    பொன்னையன்

    எத்தனை பேரிடம் பேசினாலும் சசிகலா அ.தி.மு.க.வில் நுழையவே முடியாது - பொன்னையன்

    ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மதுசூதனன் தலைமையிலான அ.தி.மு.க. தான் உண்மையானது என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக தீர்ப்பு கூறியுள்ளது என பொன்னையன் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கியதாக தெரிவித்து இருந்த சசிகலா கடந்த மாதம் முதல் தனது ஆதரவாளர்களை செல்போனில் தொடர்புகொண்டு பேசி வருகிறார்.

    கட்சியை காப்பாற்றுவதற்காக அ.தி.மு.க.வுக்கு நான் உறுதியாக வருவேன். கட்சிக்காக பாடுபட்ட உண்மையான தொண்டர்களை நீக்கிக் கொண்டே செல்வதால் கட்சிக்கு என்ன பயன்? ஓரிருவர்களின் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா? எனக்கான நேரம் வந்துவிட்டது என்று சசிகலா பேசி உள்ளார்.

    இதற்கு அ.தி.மு.க. அமைப்புச்செயலாளருமான முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    சசிகலா எத்தனை பேரிடம் தொலைபேசியில் பேசினாலும் அவரை அ.தி.மு.க.வில் யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அவரை கட்சியை விட்டு எப்போதோ நீக்கி விட்டோம். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மதுசூதனன் தலைமையிலான அ.தி.மு.க. தான் உண்மையானது என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக தீர்ப்பு கூறியுள்ளது.

    அ.தி.மு.க.வில் சசிகலா, தினகரனுக்கு எந்த தொடர்பும் கிடையாது. சசிகலாவுடன் இப்போது தொலைபேசியில் பேசுபவர்கள் தினகரனுடன் ஏற்கனவே தொடர்பில் இருந்தவர்கள்.

    நாங்கள் தான் அவர்களை கட்சியை விட்டு நீக்காமல் கால அவகாசம் கொடுத்து வந்தோம். இப்போது பல பேர் அ.தி.மு.க.வுக்கு திரும்பி விட்டனர். ஒரு சிலர் தான் இன்னும் அவர்களோடு தொடர்பில் உள்ளனர். அந்த மாதிரி நபர்களை தான் சசிகலா தொடர்புகொண்டு பேசுகிறார்.

    கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை தலைமை கழக நிர்வாகிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் தான் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுகிறார்கள். எனவே இந்த வி‌ஷயத்தில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மீது யாரும் குற்றம் சுமத்த முடியாது.

    புரட்சி தலைவி அம்மாவுடன் சசிகலா இருந்தபோது பல்வேறு சூழ்ச்சிகளை செய்தார். சசிகலாவின் சுயரூபம் அம்மாவுக்கு தெரிய ஆரம்பித்ததால் போயஸ் கார்டனை விட்டு சசிகலாவை விரட்டினார். கட்சியை விட்டும் துரத்தினார்.

    அதன்பிறகு மன்னிப்பு கேட்டுதான் சசிகலா மீண்டும் உள்ளே நுழைந்தார். கட்சியில் பலபேருக்கு எதிராக என்னென்ன சூழ்ச்சிகள் செய்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும். எனவே சசிகலாவை யாரும் ஒருபோதும் அ.தி.மு.க.வில் சேர்க்கவே மாட்டார்கள். சசிகலாவால் அ.தி.மு.க.வில் நுழையவே முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×