search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை
    X
    பாபநாசம் அணை

    மேற்கு தொடர்ச்சி மலையில் மழை- பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்வு

    அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 94 அடியாக இருந்தது. நேற்று பெய்த மழை காரணமாக ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று காலை 100 அடியாக உள்ளது.
    நெல்லை:

    தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பாபநாசம், குண்டாறு அணைப்பகுதியில் 42 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அடவிநயினார் அணைப்பகுதியில் 23 மில்லிமீட்டரும், சேர்வலாறு, கொடுமுடியாறு அணைப்பகுதியில்-20 மில்லிமீட்டர் மழையும், செங்கோட்டையில்-19 மில்லிமீட்டர், கருப்பா நதி-16 மில்லிமீட்டர், தென்காசி-13 மில்லிமீட்டர், கடனாநதி-4 மில்லிமீட்டர், சங்கரன்கோவில், ஆய்க்குடி பகுதியில் 2 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழைக்காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. .

    அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணை ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக எந்த அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 2 ஆயிரத்து 695 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 1,205 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று 133.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 144.85 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு இன்று வினாடிக்கு 367 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 675 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் இன்று காலை 82.80 அடியாக உள்ளது.

    கடனாநதி அணை நீர்மட்டம் 74.90 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 66 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 60.70 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

    அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 94 அடியாக இருந்தது. நேற்று பெய்த மழை காரணமாக ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று காலை 100 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் இன்று 33.80 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 28 அடியாக உள்ளது.
    Next Story
    ×