search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    தர்மயுத்தம் செய்திருக்காவிட்டால் ஓ.பி.எஸ்.சை முதல்வர் ஆக்கி இருப்பேன் - சசிகலா

    தனது கடைசி மூச்சு வரை அ.தி.மு.க.வின் ஒரு பகுதியாக இருப்பேன் என தனது ஆதரவாளர்களுடன் சசிகலா பேசியதோடு அடுத்தடுத்த ஆடியோக்களை வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து திரும்பிய சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார்.

    கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து சசிகலா தனது ஆதரவாளர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலருடன் போனில் பேசி வருகிறார். அந்த ஆடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    கட்சியை காப்பாற்ற விரைவில் வருவேன். கவலைப்படாமல் இருங்கள், கட்சியை சரிசெய்து விடலாம் என்று ஆடியோவில் பேசும் சசிகலா அ.தி.மு.க.வில் நுழைந்து தலைமை பதவிக்கு வருவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார்.

    இந்த நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் உள்பட 16 பேர் அ.தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து திடீரென நீக்கப்பட்டனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்தனர். இது கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த சசிகலா, அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம் தொடர்பாக நேற்று தனது ஆதரவாளர்களுடன் பேசியதோடு அடுத்தடுத்த ஆடியோக்களையும் வெளியிட்டார்.

    சசிகலாவிடம் தேனியை சேர்ந்த ஆதரவாளர் சிவனேசன் போனில் பேசுகையில், ‘உங்களிடம் பேசியதற்காக நிர்வாகிகள் சிலரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள். நீங்கள் ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து கட்சியை நடத்த வேண்டும்’ என்று கூறினார். அதற்கு பதில் அளித்து சசிகலா கூறியதாவது:-

    நான் நலமாக இருக்கிறேன். என்னை பொறுத்த வரை கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் பக்கம் ஒன்றுமில்லை. நல்லது நடக்க வேண்டும். கட்சி நன்றாக இருக்க வேண்டும். நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கியது தவறு.

    என்னிடம் பேசுகிற தொண்டர்கள் எல்லோருமே வருத்தப்படுகின்றனர். நீங்கள் வந்தால் தான் கட்சி சரியாக இருக்கும் என்கின்றனர். எனக்கு கஷ்டமாக உள்ளது.

    எதிர்க்கட்சியாக இருக்கும் போது கட்சியை எப்படி கொண்டுபோக வேண்டும் என்பதுகூட தெரியவில்லை. கட்சியில் இருக்கிறவர்களை நீக்கிக்கொண்டே போனால் எப்படி?

    இதையும் படியுங்கள்...அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி- முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

    அந்த சமயத்தில் ஓ.பி.எஸ். எனக்கும், என் குடும்பத்துக்கும் எதிராக தர்மயுத்தம் செய்திருக்காவிட்டால் அவரை மீண்டும் முதல்வர் ஆக்கி இருப்பேன். தற்போது ரொம்ப சாதி ரீதியாக போய்க்கொண்டிருப்பதாக அனைத்து பகுதிகளில் இருந்தும் பேசுகிறவர்கள் கூறுகிறார்கள். ஈரோடு, சூலூரில் இருந்து பேசுகிறவர்கள் வருத்தப்பட்டனர். அனைவரும் முதல் புகாராக இதை கூறி ‘நீங்கள் வந்து கட்சியை காப்பாற்ற வேண்டும்’ என்கின்றனர்.

     ஓ பன்னீர்செல்வம்

    அ.தி.மு.க. பொதுவான கட்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் பொதுவான கட்சியாக இருந்ததை இந்த அளவுக்கு கொண்டு போய் விட்டனரே என்று தான் வருத்தம். இதே நிலை தொடர்ந்தால் என்னவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்திருக்கும். அதற்கு அவர்கள் தரப்பில் ஒத்துழைப்பு இல்லை. அனைவரும் ஒன்றுசேர்ந்து இருந்தால் தான் கட்சியை நன்றாக கொண்டு செல்ல முடியும். அதுவே இல்லை என்றால் எப்படி?

    இதை நினைத்து தான் தொண்டர்கள் கவலைப்படுகின்றனர். அவர்களுக்கு தாயாக நான் என்ன சொல்ல முடியும்? நான் அவர்களை கட்டுப்படுத்தி வருகிறேன். அவர்கள் அனைவரும் நொந்துபோய்விட்டனர். யார் போன் செய்தாலும் வருத்தப்படுகின்றனர்.அனைத்து சாதியினரும் இதை பேசுகின்றனர்.

    ஜெயலலிதா கூறியபடி 100 ஆண்டுகள் நம் ஆட்சி நடக்கும் என்பதை நிலைநாட்டி காண்பிக்க வேண்டும். சிரமப்பட்டு வளர்த்த கட்சி கண் முன்பு வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்கள் வெற்றி பெற்று காட்டுகிறேன் என கூறியதால் நான் ஒதுங்கி இருந்தேன்.

    தற்போது தொண்டர்கள் மனக்குமுறலோடு இருக்கும் போது நான் எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும். எனவே தொண்டர்களை சந்திக்க வருகிறேன் என தெரிவித்தேன். அவர்களை கட்சியில் இருந்து நீக்கியதால் எல்லோரும் இது குறித்து பேசுகின்றனர்.

    ஓரிருவர் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா? இது கட்சி நடத்துகிறவர்களுக்கு அழகா? தொண்டர்கள் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தது தவறா? என் முதுகில் குத்தி குத்தி, முதுகில் குத்த இடமே இல்லை. அந்த அளவுக்கு செய்துவிட்டனர்.

    இப்போது தொண்டர்களையும் செய்யும் போது எப்படி பார்த்துக்கொண்டு இருக்க முடியும். கஷ்டப்பட்ட காலத்தில் கட்சியை நிமிர்த்தி கொண்டுவர ஜெயலலிதா எவ்வளவு பாடுபட்டார். அவருடன் நானும் எவ்வளவு பாடுபட்டேன். இப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தொண்டர்கள் நினைப்பதை செய்துகாட்டுவேன்.

    எனக்கு என்று எதுவும் இல்லை. தொண்டர்கள் தான். அவர்களோடு கடைசி வரை இருந்துவிட்டு போகிறேன். தற்போது தொண்டர்கள் சொல்வதை கேட்டு மிகுந்த வருத்தத்தில் உள்ளேன். அவர்கள் என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது. தேர்தலில் நாங்களே வந்து காட்டுவோம் என்றனர். சரி என்று ஒதுங்கி இருந்தேன்.

    கட்சியை காப்பாற்ற நான் உறுதியாக வருவேன். வந்தே தீருவேன். எனக்கு அடிமட்ட தொண்டர்கள் தான் முக்கியம்.

    தொண்டர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க.வை வலிமைப்படுத்துவேன். எனது கடைசி மூச்சு வரை அ.தி.மு.க.வின் ஒரு பகுதியாக இருப்பேன். மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவேன். அதற்கான நேரம் வந்துவிட்டது. நிச்சயம் நல்லது நடக்கும். கவலை பட வேண்டாம். ஊரடங்கு காலம் முடிந்ததும் எல்லோரையும் சந்திக்கிறேன்.

    இவ்வாறு சசிகலா ஆடியோவில் பேசி உள்ளார். 

    Next Story
    ×