search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகுபலி காட்டு யானை தாகம் தீர தண்ணீரை குடிக்கும் காட்சி.
    X
    பாகுபலி காட்டு யானை தாகம் தீர தண்ணீரை குடிக்கும் காட்சி.

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தனியாக சுற்றிதிரியும் பாகுபலி ஒற்றை யானை

    ரேடியோ காலர் பொருத்தும்பட்சத்தில் காட்டு யானை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதை எளிதாக அறிய முடியும்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. இதில் ஒரு ஆண் யானை மட்டும், யானை கூட்டத்தோடு சேராமல் தன்னந்தனியாக கம்பீரமாக சுற்றித் திரிகிறது.

    வனப்பகுதியில் உணவைத்தேடியும், தண்ணீர் தொட்டிகளை தேடி இந்த யானை நடந்து வரும் அழகையும், கம்பீர தோற்றத்தையும் பார்த்த பொதுமக்களும், வனத்துறையினரும் இதனை பெரிய தம்பி என அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் பாகுபலி திரைப்படம் வெளியானதும் அந்தத் திரைப்படத்தில் வரும் கம்பீரமான யானையைப் போல் தோற்றம் கொண்ட பெரிய தம்பி யானையை பாகுபலி யானை என்று பெயரிட்டு அழைக்க தொடங்கினர்.

    அடர்ந்த வனப்பகுதியில் உணவு மற்றும் நீர் நிலைகளைத் தேடி அலையும் பாகுபலி காட்டு யானை இரவு நேரத்தில் வனப்பகுதியையொட்டி கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய விளைபொருட்களை நாசம் செய்து வந்தது.

    மிகவும் சாதுவான குணாதிசயம் கொண்ட இந்த பாகுபலி யானை பயிர்களை சேதப்படுத்துமே தவிர, மற்ற யானைகளையோ, மக்களையோ, அவர்களின் உடமைகளையோ தாக்குவது கிடையாது.

    இந்த நிலையில் இந்த யானை பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கவும், யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி அதனை 24 மணி நேரமும் கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்து அதற்கு அனுமதி கோரினர்.

    தற்போது அனுமதி கிடைத்துள்ளதை தொடர்ந்து அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,

    பாகுபலி காட்டு யானை பொருத்தமான மற்றும் சரியான நிலப்பரப்புக்கு வரும்போது கும்கி யானைகளின் உதவியோடு கட்டுப்படுத்தப்பட்டு ரேடியோ காலர் பொருத்தப்பட உள்ளது. ரேடியோ காலர் பொருத்தும்பட்சத்தில் காட்டு யானை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதை எளிதாக அறிய முடியும் என்றனர்.

    முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின்பேரில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மேற்பார்வையில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் மற்றும் வனத்துறையினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.


    Next Story
    ×