search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுக்களுக்கு தீர்வு காண தனிப்பிரிவு தொடக்கம்

    ஒவ்வொரு மனுதாரரின் பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் ஊழியர்கள் சேகரித்துள்ளனர்.
    திருப்பூர்:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அந்த மனுக்களுக்கு தான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று  வாக்குறுதி அளித்தார். 

    பின்னர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் மாவட்டம் வாரியாக பெற்ற மனுக்களுக்கு தீர்வு காண தனியாக அதிகாரியை நியமித்தார். இதையடுத்து மனுக்கள் ஒவ்வொரு மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 27 ஆயிரம் மனுக்கள் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த மனுக்களும் சென்னையில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.பின்னர் அந்த மனுக்கள் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வாரியாக பிரிக்கப்பட்டது. 

    வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகராட்சி நிர்வாகம், மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என ஒவ்வொரு துறைவாரியாக மனுக்கள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.ஒவ்வொரு மனுதாரரின் பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் ஊழியர்கள் சேகரித்துள்ளனர். 

    விண்ணப்பங்களுக்கு தாலுகா வாரியாக தீர்வு காணப்படுவதை கண்காணிக்கவும், அதன் விவரங்களை தெரிவிக்கும் வகையிலும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனிப்பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 10 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    ஒவ்வொரு தாலுகாவிலும் தீர்வு காணப்பட்ட மனுக்கள் விவரங்களை இந்த தனிப்பிரிவு அலுவலகத்தில் தெரிவித்து அவற்றை கணினியில் பதிவு செய்து சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட உள்ளது.

    மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த தனிப்பிரிவு மையத்தை 2 துணை தாசில்தார்கள் கண்காணித்து வருகிறார்கள்.
    Next Story
    ×