search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி, 6 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி மற்றும் 6 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    குளச்சல்:

    குமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    தற்போது கொரோனா தொற்று பரவி உள்ளது. அதை தடுக்க குமரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டத்துக்கு செல்லவே இ-பதிவு அவசியம் என்று அரசு அறிவித்து உள்ளது. ஆனால் அப்படியும் வாகனங்கள் மூலம் அண்டை மாநிலமான கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது நின்றபாடில்லை.

    இந்த நிலையில் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் உத்தரவின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜான்போஸ்கோ தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குறும்பனை பகுதியில் செல்லும்போது அங்கு சாலையோரம் நின்ற ஒரு சொகுசு காரில் அரிசி மூடைகள் ஏற்றியது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த காரை நெருங்கியதும், அதில் இருந்த ஆசாமி தப்பியோடி விட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் சொகுசு காரில் சோதனை செய்த போது, அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதைத்தொடர்ந்து கார் மற்றும் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இதே போல் குறும்பனையில் போலீசார் சோதனை நடத்தியபோது, அங்கு 120 கேன்களில் 6 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய் பதுக்கி வைத்து இருந்ததும் தெரிய வந்தது. அந்த மண்எண்ணெயையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ரேஷன் அரிசி மற்றும் மண்எண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

    சொகுசு காரின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரின் முகவரியை போலீசார் கண்டுபிடிக்க முயற்சி செய்த போது அந்த பதிவு எண் இரு சக்கர வாகனத்தின் எண் என்பது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து சொகுசு காரின் உரிமையாளர் யார்? ரேஷன் அரிசி மற்றும் மண்எண்ணெயை கடத்த முயன்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×