search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இன்று முதல் செயல்பட அனுமதி - டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைப்பு

    டாஸ்மாக் கடைகள் இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து திண்டுக்கல்லில் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கும் பணி நேற்று நடந்தது.
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்களும் அடைக்கப்பட்டன.

    அதன் பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. இதனால் பலர் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மதுபானங்களை கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய தொடங்கினர். அவர்களை போலீசார் கைது செய்தும், அவர்களிடம் இருந்து மதுபானங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் மதுபானம் கொடுக்க கூடாது. கடை அருகே மது அருந்த அனுமதிக்க கூடாது. முக கவசம் அணியாதவர்களுக்கு மதுபானம் விற்க கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் டாஸ்மாக் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

    டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து சமூக இடைவெளியுடன் மதுப்பிரியர்கள் மதுவாங்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல்லில் உள்ள மதுபான கடைகள் முன்பு மதுப்பிரியர்கள் வரிசையில் நிற்கும் வகையில் கம்புகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதேபோல் சமூக இடைவெளியுடன் அவர்கள் காத்திருக்கும் வகையில் வட்டம், சதுர வடிவில் கோடுகள் வரையப்பட்டன. மேலும் நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் மதுபானங்கள் தேவையான அளவில் இருப்பு வைக்கும் பணியும் நேற்று நடந்தது.

    Next Story
    ×