search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் தடுப்பூசி போட டோக்கன் வாங்குவதற்கு காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
    X
    நாகர்கோவிலில் தடுப்பூசி போட டோக்கன் வாங்குவதற்கு காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

    தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம்

    தயக்கத்தை உடைத்தெறிந்த மக்கள் ஆர்வத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டு கொள்கிறார்கள்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா தொற்றின் 2வது அலை வீசத் தொடங்கியது. தினந்தோறும் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றதால் மக்கள் அச்சம் அடைந்தனர். முதலில் தடுப்பூசி செலுத்துவதில் மக்களுக்கு சிறிது தயக்கம் இருந்தது. இதனால் தடுப்பூசி செலுத்துவது குறைவாக இருந்தது.

    இந்த நிலையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து சென்றதால் தமிழக மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டது. நாம் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றால் தடுப்பூசி முக்கியம் என்பதை உணர்ந்தனர். இதனால் மக்களுக்கு தடுப்பூசி மீது இருந்த தயக்கம் தளர்ந்தது. தயக்கத்தை உடைத்தெறிந்த மக்கள் ஆர்வத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி மையங்களில் கூட்டம், கூட்டமாக குவிந்து தடுப்பூசி போட்டு கொள்கிறார்கள்.

    இந்த மையங்களில் அதிகாலை முதலே குவியும் மக்கள், நீண்ட வரிசையில் டோக்கன்களை பெற்று கொண்டு காத்திருந்து தங்கள் தடுப்பூசியை செலுத்துகின்றனர். மக்களிடம் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் ஏற்பட்ட வேளையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தது.

    பல இடங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏராளமான மக்கள் குவிந்தாலும் அவர்களில் ஒரு நாளைக்கு 100 முதல் 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய வண்ணம் இருந்தனர். ஒரு சில இடங்களில் மக்கள் தடுப்பூசி போட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதையும் நம்மால் பார்க்க முடிந்தது.

    இந்த நிலையில் தமிழகத்திற்கு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இவை சென்னையில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. இதையடுத்து கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் திரண்டனர்.

    சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், நெல்லை, ஈரோடு உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் கூட்டமாக அதிகாலையிலேயே குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை செலுத்தி சென்றனர்.

    இதற்கிடையே தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், ஏமாற்று வேலையை தடுக்கும் பொருட்டு அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்த வரும் மக்களுக்கு டோக்கன் வழங்கினர்.

    கோவை மாவட்டத்திலும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ முகாம்கள் என 85க்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி முகாம்களில் இன்று காலை மக்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். அவர்கள் கொட்டும் மழையிலும் குடைபிடித்த படி காத்திருந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இதேபோல் நேற்று மாற்றுதிறனாளிகளுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வத்துடன் ஆஸ்பத்திரிகளுக்கு வந்தனர்.
     
    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 83ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் 14 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் உள்ளது. அந்த தடுப்பூசிகள் இன்று முதல் பொதுமக்களுக்கு போடப்படுகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி மையங்களில் தினமும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிகாலையிலேயே தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் திரண்டனர்.

    உடுமலையில் தடுப்பூசி டோக்கன் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்து பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம் மாவட்டத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து 5 ஆயிரத்து 500 கோவேக்சின் தடுப்பூசி டோஸ்கள் வந்தன. மேலும் 18 ஆயிரத்து 300 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களும் சேலத்துக்கு வந்தன. இவை உடனடியாக பிரித்து கொடுக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 1000 டோஸ் கோவாக்சின் மற்றும் 7,700 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தது. இதையடுத்து அவற்றை மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று போடப்பட்டது. நேற்றும் பிற்பகலில் தடுப்பூசி போடப்பட்டது. இன்று காலை முதலே தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் மையங்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
    நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் தடுப்பூசி மையத்தில் கூட்டம் தினமும் அதிகரித்தவண்ணம் இருப்பதால் இன்று முதல் அதன் அருகில் உள்ள மற்றொரு அறையில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படிநெல்லை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாவட்டத்திற்கு 6,500 தடுப்பூசிகள் வந்தது. அவை அனைத்து மையங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டது. இன்றும் அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போட வந்தவர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தில் இதுவரை சுமார் 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வெயில், மழையை பொருட்படுத்தாமல் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

    நாகர்கோவிலில் 4 இடங்களில் தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. கார்மல் பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் கோவிஷீல்டு மருந்துகள் போடப்பட்டது. இதனால் இங்கு காலையிலேயே கூட்டம் அலைமோதியது. இளம்பெண்கள், வாலிபர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

    குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கோவாக்சின் தடுப்பூசிகள் இன்று போடப்பட்டது. குழித்துறை பகுதியில் காலை முதலே மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குடைபிடித்தவாறு நீண்ட வரிசையில் நின்று டோக்கன்களை வாங்கிச் சென்றனர். டோக்கன் வாங்கியவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 3,87,004 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 119 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.மேலும் மதுரையில் 20,000 டோஸ்கள் தற்போது கையிருப்பில் உள்ளன.
    எனவே இன்றும் பல்வேறு முகாம்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் நீண்ட கியூவில் நின்று தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

    தருமபுரி அரசு மருத்துவமனையில் 200 தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டத்தால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதிகாரிகள் கூறும்போது, தருமபுரி மாவட்டத்திற்கு நேற்றுமுன்தினம் 6,600 தடுப்பூசி வந்தது. அனைத்தும் போடப்பட்டது. இனி எப்போது வரும் என்று கூற முடியவில்லை வந்த பிறகு அனைவரும் தடுப்பூசி போடுவோம் என்றனர்.

    திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று வந்த 16,700 டோஸ் தடுப்பூசி மருந்துகள் இன்று கோ.அபிஷேகபுரம் கோட்டம், புறநகர் பகுதியில் வையம் பட்டி, தா.பேட்டை உள் ளிட்ட 9 இடங்களில் செலுத்தப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் தடுப்பூசி செலுத்த காத்திருந்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 9 ஆயிரத்து 700 டோஸ் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இங்கு பொதுமக்கள் ஆர் வமுடன் நீண்ட வரிசையில் காத்திந்தனர்.

    அரியலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள 5 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் 11 இடங்களில் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. இதே போல் கரூர், பெரம்பலூரிலும் தலா 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 7 இன்று 69 இடங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. கோவேக்சின் 2வது தவணை ஊசி மட்டுமே செலுத்தப்பட்டது. ஊசி போட்டுக்கொள்ள நள்ளிரவு 2 மணி முதலே பல்வேறு இடங்களில் பொதுமக்கள் திரண்டனர். ஒவ்வொரு ஆஸ்பத்திரிகளிலும் 200 முதல் 400 பேர் வரை தடுப்பூசி போட டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. டோக்கன் பெறுவதில் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக 23 இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 60 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

     கடலூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள வடலூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இளைஞர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

     விழுப்புரம் மாவட்டத்திலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஏராளமானோர் அரசு மற்றும் கொரோனா தடுப்பு முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினர்.

    Next Story
    ×