search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றதை படத்தில் காணலாம்.
    X
    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றதை படத்தில் காணலாம்.

    5 நாட்களுக்கு பிறகு மீண்டும் பணி தொடங்கியது : தூத்துக்குடிக்கு 8,600 தடுப்பூசிகள் வந்தது

    தூத்துக்குடி சுகாதார மாவட்டத்துக்கு 4 ஆயிரத்து 800 கோவிஷீல்டு, 500 கோவேக்சின் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 300 தடுப்பூசி வந்து உள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்த மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஆர்வமாக வருகின்றனர். கிராமம் தோறும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

    கடந்த 5 நாட்களாக தடுப்பூசி இல்லாததால் அனைத்து சிறப்பு முகாம்களும் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 88 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தன. இந்த மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

    இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக தடுப்பூசி மையத்துக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பி வைத்தது. இந்த தடுப்பூசிகள் நேற்று முன்தினம் சென்னையை வந்தடைந்தன. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு நேற்று 8 ஆயிரத்து 600 தடுப்பூசி வந்து உள்ளன.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சுகாதார மாவட்டத்துக்கு 4 ஆயிரத்து 800 கோவிஷீல்டு, 500 கோவேக்சின் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 300 தடுப்பூசி வந்து உள்ளது.

    இதில் முதலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 300, மெஞ்ஞானபுரம் 300, வல்லநாடு 300, ஏரல் 500, காயாமொழி 500, தென்திருப்பேரை 500, புதுக்கோட்டை 500, திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 200, காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி 100, தூத்துக்குடி மாநகராட்சி 900, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 1,000 மற்றும் கையிருப்பில் 200 தடுப்பூசிகளும் வைக்கப்பட்டு உள்ளன.

    இதேபோன்று கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு 2 ஆயிரத்து 800 கோவிஷீல்டு, 500 கோவேக்சின் ஆக மொத்தம் 3 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் வந்தன. இதனை அனைத்து தடுப்பூசி மையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டு உள்ளன.

    மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி 5 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது.

    இதனால் மக்கள் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பல்வேறு மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டனர்.
    Next Story
    ×