search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரிசையில் காத்திருந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரிசையில் காத்திருந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

    விழுப்புரம் மாவட்டத்திற்கு 11,500 டோஸ் கொரோனா தடுப்பூசி வருகை

    விழுப்புரம் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி 11,500 டோஸ் வந்துள்ளதையடுத்து, 4 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது.
    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள சுகாதார கிடங்கில் தடுப்பூசிகள் கையிருப்பு ஏதும் இல்லாததன் காரணமாக கடந்த 8-ந் தேதியில் இருந்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் மாலை கோவிஷீல்டு தடுப்பூசி 10 ஆயிரம் டோஸ்களும், கோவேக்சின் தடுப்பூசி 1,500 டோஸ்களும் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டன. கடலூரில் உள்ள குளிர்சாதன மருந்து கிடங்கிற்கு வந்திறங்கிய இந்த தடுப்பூசி மருந்துகளை விழுப்புரத்தை சேர்ந்த சுகாதாரத்துறையினர், கடலூரில் இருந்து பெற்று விழுப்புரம் கொண்டு வந்தனர்.

    அதனை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் கிராமப்புற, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 72 இடங்களிலும், கூடுதலாக 28 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தியும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு 11,500 டோஸ் தடுப்பூசி சென்னையில் இருந்து வந்துள்ளன. மொத்தம் 100 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. ஒரு முகாமில் 100 பேர் வீதம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளோம். இனி வரும் நாட்களிலும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்ப மாவட்டத்திற்கு தேவையான அளவிற்கு தடுப்பூசி மருந்துகளை அனுப்புமாறு நாங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை பொறுத்து முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி மருந்துகளை அனுப்புவதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆகவே சென்னையில் இருந்து வரப்பெறும் தடுப்பூசி மருந்துகளை பொறுத்து அவற்றை மாவட்ட சுகாதார கிடங்கில் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என்றார்.
    Next Story
    ×