search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் ராஜ கணபதி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக இன்று காலை பொதுமக்கள் திரண்டு
    X
    திருப்பூர் ராஜ கணபதி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக இன்று காலை பொதுமக்கள் திரண்டு

    தடுப்பூசி செலுத்த காலையிலேயே திரண்ட பொதுமக்கள்

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 899-ஆக உயர்ந்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. தினசரி பாதிப்பு  2ஆயிரத்தை தாண்டி பதிவாகியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 853 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 899-ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் நேற்று பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 625 -ஆக உயர்ந்துள்ளது.இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வம் காட்டியதால் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதனால் சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. 

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இதையறிந்த பொதுமக்கள் இன்று காலை 6மணி முதலே திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள 19 சுகாதார நிலையங்களிலும் குவிய தொடங்கினர். ஆனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

    இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி மையங்களுக்கு பொதுமக்கள் செல்வதும், ஏமாற்றத்துடன் திரும்புவதுமாக உள்ளனர். எனவே  பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×