search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விற்பனைக்கு அனுப்பப்படும் வைக்கோல்.
    X
    விற்பனைக்கு அனுப்பப்படும் வைக்கோல்.

    நெல் அறுவடையால் வைக்கோல் விற்பனை அமோகம்

    நெல் மற்றும் வைக்கோல் விற்பனை இரண்டிலும் விவசாயிகள் எதிர்பார்த்த விலை இன்றி வியாபாரிகளால் மட்டுமே விலை நிர்ணயம் செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது.
    உடுமலை:

    திருப்பூர்மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக நெல் அறுவடை தீவிரமடைந்து வருகிறது.பொது விநியோக திட்டத்துக்காக அரசு கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதில் வெளிப்படைத்தன்மையற்ற நிலையால் பலரும் குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் சூழல் நிலவுகிறது.விதை நெல் சாகுபடிக்காகவும் தனியாரால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வைக்கோல் விற்பனையும் விறுவிறுப்படைந்துள்ளது. இதிலும் விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை கிடைக்காத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: -

    முன்பு ஆட்களை கொண்டு வைக்கோல் கட்டுகள் கட்டுவது வழக்கம்.ஆனால் தற்போது விவசாய வேலைக்கு ஆட்கள் வருவது குறைந்துள்ளதால் எந்திரம் மூலம் கட்டுவது நடைமுறையில் உள்ளது.4 அடி மற்றும் 3 அடி நீள கட்டுகளாக கட்டப்படும்.நன்றாக காய்ந்த வெள்ளை நிறம், அழுக்கு நிறம், உதிரி என 3 வகையாக தரம் பிரித்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 4 அடி நீள கட்டு எனில் ரூ.70-ம் ,3 அடி நீளக்கட்டு எனில் ரூ.80-ம் கிடைக்கிறது.

    தரமான வைக்கோல் நகர பகுதிகளில் மாடு வளர்ப்போர் தேவைக்காக வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது 4 அடி நீளக் கட்டு ரூ.200 முதல் ரூ.165 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது சந்தை விற்பனையாக ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. 3 அடி நீள கட்டு ரூ. 160 வரைவிற்பனையாகிறது. இதற்கான கட்டுக்கூலி ரூ.35 கொடுக்க வேண்டும். 4 அடி நீள கட்டுக்கு ரூ.40 கட்டு கூலியாக கொடுக்க வேண்டியுள்ளது. 

    அழுக்கு நிறத்தில் கிடைக்கும் வைக்கோல் காளான் வளர்ப்புக்காக கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் கோவை சிங்காநல்லூரில் உள்ள பீங்கான் தொழிற்சாலைக்காக அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. பீங்கான் விற்பனையின்போது அவை உடையாமல் பாதுகாக்க இவ்வகை வைக்கோல் பயன்படுத்தப்படுகிறது. 

    பெரு விவசாயிகள் அல்லது பால் பண்ணை வைத்திருப்போர் சொந்த தேவைகளுக்காக பாரம்பரிய முறையில் வைக்கோலை பாதுகாத்து வருகின்றனர். நெல் மற்றும் வைக்கோல் விற்பனை இரண்டிலும் விவசாயிகள் எதிர்பார்த்த விலை இன்றி வியாபாரிகளால் மட்டுமே விலை நிர்ணயம் செய்யும் போக்கு தொடர்ந்து வருகிறது. 

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×