search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் நிறுத்தம்- பொதுமக்கள் ஏமாற்றம்

    கோவை மாவட்டத்திற்கு கடந்த வாரம் 40 ஆயிரம் கோவிஷீல்டு, 8 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி என மொத்தம் 48 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மாதம் மின்னல் வேகத்தில் பரவியது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக தற்போது கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருகிறது.

    கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு கேட்டு கொண்டதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது. கோவை மாவட்டத்தில் முதலில் கொரோனா தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு சிறிது தயக்கம் இருந்தது. ஆனால் தொற்றின் வேகம் மாவட்டத்தில் அதிகரித்ததை தொடர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டினர்.

    கோவையில் அரசு ஆஸ்பத்திரி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர் அரசு ஆஸ்பத்திரி உள்பட 93 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தினந்தோறும் இந்த மையங்களில் அதிகாலை முதலே மக்களே கூட்டம், கூட்டமாக குவிந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 5-ந் தேதி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் கோவையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற வில்லை. தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் தடுப்பூசி பணி இன்று 3-வது நாளாக தடுப்பூசி பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    தடுப்பூசி மையங்களில் இருப்பு இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    கோவை மாவட்டத்திற்கு கடந்த வாரம் 40 ஆயிரம் கோவிஷீல்டு, 8 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி என மொத்தம் 48 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன. இவற்றை பிரித்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பினோம். இந்த ஊசிகள் அனைத்தும் சில நாட்களிலேயே போடப்பட்டு தீர்ந்து விட்டன.

    தற்போது மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லை. இதனால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21-ந் தேதியில் இருந்து இதுவரை கோவைக்கு 62,990 கோவிஷீல்டு, 20,800 கோவேக்சின் தடுப்பூசிகள் என மொத்தம் 83,700 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 82 ஆயிரத்து 573 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது வரை கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 189 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசிகள் இல்லை. தடுப்பூசிகள் வந்ததும் மீண்டும் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் நடக்கும் என்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 40 லட்சம் பேர் உள்ளனர். தொற்று சங்கிலி தொடரை உடைக்க வேண்டும் என்றால் மாவட்டத்தில் தற்போது 30 சதவீதம் பேர் அதாவது 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். தற்போது வரை 5 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் மட்டுமே தடுப்பூசி போடுகின்றனர். மற்ற நாட்களில் தடுப்பூசி போடும் பணி நடப்பதில்லை. மேலும் எந்த வயதினருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்ற தகவல் முறையாக இல்லாததாலும் மக்கள் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள் என்றனர்.

    Next Story
    ×