search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இயற்கை வேளாண்மைக்கு அரசு உதவிக்கரம்-விவசாயிகள் வலியுறுத்தல்

    நஞ்சில்லா உணவு உற்பத்திக்காக இயற்கை வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்களை வேளாண்துறை வாயிலாக, மானியத்தில் வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    உடுமலை:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பல ஆயிரம் ஏக்கரில், காய்கறிகள், தானியங்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.தற்போது நஞ்சில்லா உணவு, காய்கறி உற்பத்தி என்ற அடிப்படையில்  ரசாயனங்களை தவிர்த்து  பாரம்பரிய இயற்கை வேளாண் முறைகளுக்கு தற்போது மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

    தேங்காய் மற்றும் காய்கறிகள், தானியங்கள் உட்பட உற்பத்திக்கானசாகுபடிகளில் ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளை விவசாயிகள் தவிர்க்க துவங்கியுள்ளனர்.ஆனால் இத்தகைய இயற்கை வேளாண்சாகுபடிக்கான இடுபொருட்கள் தேவையான போது கிடைப்பதில்லை.விலையும் அதிகளவு உள்ளது.இதனால் இயற்கை முறைக்கு மாற விரும்புபவர்களும் மீண்டும் ரசாயன உரம் மற்றும் மருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில் வெள்ளை ஈ தாக்குதலால், தென்னை சாகுபடியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இத்தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்க்க வேண்டும் என வேளாண்துறையினரே வழிகாட்டுதல் வழங்கினர்.

    எனவே விவசாயிகள் தென்னை மரங்களுக்கு வேப்பம் புண்ணாக்கு மற்றும் வேப்ப எண்ணையை பயன்படுத்தி, வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.ஆனால், தரமான வேப்பம் புண்ணாக்கு கிடைக்காமல், தாராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர். இவற்றின் விலை சீசனுக்கேற்ப, கூடுதலாக்கி விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத நஞ்சில்லாத உணவு உற்பத்திக்கு கைகொடுக்கும் இயற்கை வேளாண்மைக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.வேளாண்துறை சார்பில் வட்டார வாரியாக, இயற்கை வேளாண்மைக்கான இடுபொருட்கள், உயிர் உரங்கள் ஆகியவற்றை ஒரே மையத்தில் மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

    இது குறித்து வேளாண்துறை பரிசீலித்து  அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும் என்றனர்
    Next Story
    ×