search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக காத்திருந்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக காத்திருந்தவர்களை படத்தில் காணலாம்.

    கொரோனா பரவலை தடுக்க 40 மையங்களில் கோவேக்சின் தடுப்பூசி போடும் பணி

    கோவை மாநகராட்சியை பொறுத்தவரை அரசு பள்ளிகளில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    கோவை:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என 2 வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவேக்சின் என்ற தடுப்பூசிக்குதான் அதிகளவு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    கோவை மாநகராட்சியை பொறுத்தவரை அரசு பள்ளிகளில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் போதிய தடுப்பூசி வராததால் மையங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் இருந்து கோவேக்சின் தடுப்பூசி நேற்று முன்தினம் இரவு கோவைக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று கோவை ராமநாதபுரம் மாநகராட்சிப் பள்ளி உள்பட 40 மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. அதில் கோவேக்சின் முதல் டோஸ் போட்டு விட்டு 2-வது டோஸ்காக காத்திருந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

    மேலும் நேற்று முன்தினம் தடுப்பூசி போடாததால், நேற்றும் போட மாட்டார்கள் என்று நினைத்து பெரும்பாலான பொதுமக்கள் வரவில்லை. இதனால் அங்கு போடப்பட்டு இருந்த இருக்கைகள் காலியாக இருந்தன.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் கூறும்போது, கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றார்.

    மேலும் மாநகராட்சி 27, 42-வது வார்டு பகுதிகளுக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது.

    இதில் 100 பேர் கலந்து கொண்டு 2-ம் தவணை தடுப்பூசி போட்டுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி செயற்பொறியாளர் செந்தில்பாலாஜி, சுகாதார அதிகாரி முருகா, மேற்பார்வையாளர் சம்பத்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    கோவை வடவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்கள் கொரோனா தடுப்பூசி போட சென்று வருகிறார்கள். ஆனால் அங்கு பணியில் இருப்பவர்கள் மருந்து இல்லை, வந்ததும் சொல்கிறோம் என்று கூறி அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் மருந்து வந்ததும் முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் இங்கு தினமும் பொதுமக்கள் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி அன்று வரச்சொன் னால் நாங்கள் வந்து தடுப்பூசி போட தயாராக உள்ளோம். ஆனால் அவ்வாறு கூறாமல் தினமும் அலைக்கழித்து வருகிறார்கள். எனவே தடுப்பூசி போட முறையான தகவலை தெரிவிக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×