search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடபழனி கோவில்
    X
    வடபழனி கோவில்

    வடபழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்துக்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு தகவல்

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
    போரூர்:

    சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.250 கோடி ஆகும்.

    இந்த இடத்தின் ஒரு பகுதியில் பெண்கள் விடுதி கட்டப்பட்டு உள்ளது. மீதம் உள்ள இடத்தில் கழிவுநீர் தேங்கியும், கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டும் பராமரிக்காமல் கிடந்தது.

    இதை பயன்படுத்தி இந்த இடத்தை அறநிலையத்துறையிடம் இருந்து எந்தவித அனுமதியும் பெறாமல் சினிமா துறையினர் மற்றும் தனி நபர்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாற்றி பணம் வசூல் செய்து ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இதன் காரணமாக இங்கு இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் நடைபெற்று வந்தது.

    வடபழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு சுத்தம் செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கும் பணி இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி கமி‌ஷனர் ககன்திப்சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதையடுத்து அங்கு வடபழனி உதவி கமி‌ஷனர் ஆரோக்ய ரவீந்திரன் இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், முகமது பரகத்துல்லா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    மீட்பு பணியின் போது இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர் குமரகுருபரன் வடபழனி கோவில் துணை கமி‌ஷனர் சித்ரா தேவி ஆகியோரும் உடன் இருந்தனர்.

    அமைச்சர் சேகர்பாபு

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாத காலத்துக்குள் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்ட நிலையில் அடுத்தபடியாக இன்று வடபழனி கோவிலுக்கு சொந்தமான இடமும் மீட்கப்பட்டுள்ளது.

    தனியார் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை யார் ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அந்த இடம் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த இடத்தில் மூடப்பட்டு உள்ள பெண்கள் விடுதி விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாதத்தில் நீங்கள் பார்த்து உள்ளது டிரெய்லர் மட்டும் தான்.

    விரைவில் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×