search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஈரோடு கிராமங்களில் கொத்து, கொத்தாக பரவும் கொரோனா தொற்று

    கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை தினசரி பாதிப்பில் 3-ம் இடத்தில் இருந்து வந்த ஈரோடு மாவட்டம் நேற்று சென்னையை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகம் எடுத்துள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை தினசரி பாதிப்பில் 3-ம் இடத்தில் இருந்து வந்த ஈரோடு மாவட்டம் நேற்று சென்னையை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளது.

    தினசரி பாதிப்பை போன்று தினசரி உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. முதலில் மாநகர் பகுதியில் வேகமாக பரவிய தொற்று தற்போது கொத்து, கொத்தாக, கிராமப்புற பகுதியில் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,694 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 66 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 2,078 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமைடந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்து 347 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 10 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்து 492 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    பவானி ஓடத்துறை ஊராட்சி, மேல் காலனி கிராமத்தில் 260 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த இந்த கிராமத்தில் 116 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமத்தின் எல்லைகளின் 4 புறமும் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் வெளியாட்கள் நுழையவும், இங்கிருந்து வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வருவாய்த்துறை சார்பில் இந்த கிராமத்தில் உள்ள 260 குடும்பத்தினருக்கும் ஒரு வார காலத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, டீ தூள், காய்கறிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையினர் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் சத்தியமங்கலம், அந்தியூர், கோபி உள்ளிட்ட ஊர்களில் உள்ள கிராம பகுதிகளிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மாநகர் பகுதியில் மட்டும் 420 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 1,274 பேர் கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள் தான். கிராமப்புற பகுதியை சேர்ந்த பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×