search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லையில் சோதனை சாவடிகளில் 618 பேருக்கு கொரோனா பரிசோதனை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாநகரத்தில் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.

    கொரோனா பாதிப்பு குறைந்து வந்தபோதிலும் நெல்லையில் அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு நெல்லை மாநகர பகுதியில் பரிசோதனை செய்து மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.

    நெல்லை மாநகர பகுதியில் உள்ள 9 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் 1,253 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கை மீறி சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்களை நெல்லை மாநகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 9 போலீஸ் சோதனை சாவடிகளில் போலீசார் மறித்து சோதனை நடத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    இந்த சோதனை சாவடிகளில் மட்டும் நேற்று 618 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்படி சோதனை செய்யப்பட்டவர்களுக்கு போலீசார் கபசுர குடிநீர் வழங்கி அறிவுரை வழங்கினார்கள். மேலும் கண்காணிப்பு கேமரா மூலம் அடிக்கடி செல்லுகின்ற வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை கண்காணித்து அபராதமும் விதித்து வருகிறார்கள். சில வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    நெல்லை மாநகரில் கடந்த சில நாட்களாக போலீசார் அதிக அளவில் சோதனையில் ஈடுபட்டு வருவதால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. இதனால் நேற்று நெல்லை பொன்னாக்குடி விலக்கு நான்கு வழிச்சாலை பகுதியில் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    கொரோனா பரவலை தடுப்பதற்காக நெல்லை மாவட்டம் முழுவதும் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றுபவர்களை பிடித்து அபராதம் விதிக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதமும் போலீசார் விதித்து வருகிறார்கள்.
    Next Story
    ×