search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொப்பூர் வனப்பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள தக்காளியை படத்தில்காணலாம்.
    X
    தொப்பூர் வனப்பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள தக்காளியை படத்தில்காணலாம்.

    சாலையோரம் கொட்டப்பட்ட தக்காளிகள் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

    தொப்பூர் அருகே வியாபாரிகள் வாங்க மறுப்பதால் விவசாயிகள் தக்காளியை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். தக்காளிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மானியதஅள்ளி, தொப்பூர் கம்மம்பட்டி, ஏலகிரி, பரிகம், சாமிசெட்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். தற்போது உள்ள கொரோனா ஊரடங்கால், காய்கறி கடைகள், ஓட்டல்கள், பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் நிறுவன கேன்டீன்கள் மூடப்பட்டுள்ளதால் தக்காளி தேவை மிகவும் குறைந்துள்ளது.

    இதனால் மண்டிகளில் வியாபாரம் இல்லாமல் தக்காளிகள் அதிகளவு குவிந்து கிடக்கிறது. தற்போது மானியதஅள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் அறுவடை செய்யப்படும் தக்காளிகளை, தொப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல் தக்காளி மண்டிக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    விவசாயிகள் கொண்டு வரும் தக்காளியை மண்டியில் வியாபாரிகள் வாங்க மறுப்பதால், கவலை அடைந்த விவசாயிகள் அவற்றை தொப்பூர் வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். தக்காளி சாகுபடி செய்து நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தொப்பூர் வனப்பகுதி தேசிய நெடுஞ்சாலையோரம் விவசாயிகள் கொட்டி செல்லும் தக்காளிகளை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர். மேலும் சாலையோரம் கொட்டிய தக்காளிகளை வனப்பகுதிகளில் உள்ள குரங்குகள் தின்று வருகின்றன.
    Next Story
    ×