search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்புத்துறையினர் மீட்ட போது எடுத்த படம்.
    X
    கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்புத்துறையினர் மீட்ட போது எடுத்த படம்.

    பாப்பிரெட்டிப்பட்டியில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் - 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

    பாப்பிரெட்டிப்பட்டியில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
    பொம்மிடி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மஜித் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மனைவி முத்தையாலு (வயது49). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலை முத்தையாலு மாயா பஜார் தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். நேற்று மதியம் பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த மழை பெய்தது. அப்போது விநாயகர் கோவில் அருகே உள்ள கிணற்றில் இருந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என பெண்ணின் குரல்கேட்டுள்ளது.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கிணற்றில் பார்த்த போது அதில் முத்தையாலு உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வமணி தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த முத்தையாலுவை மீட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. பின்னர் அவர் சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் 2 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×