search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளுவர் சிலை
    X
    திருவள்ளுவர் சிலை

    கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ரூ.1 கோடி செலவில் சீரமைப்பு

    திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் இதன் பீடமும், 95 அதிகாரங்களைக் கொண்ட பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலை குறிக்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நடுக்கடலில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி கடந்த 1996-ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையைஅப்போதைய முதல்அமைச்சர் கருணாநிதி திறந்துவைத்தார்.

    கடல்மட்டத்திலிருந்து 30 அடி உயரம் கொண்ட பாறையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 7000 டன் எடை கொண்ட இந்த சிலை 3681 மிகப்பெரிய கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அரசு சிற்ப கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் கணபதி ஸ்தபதி இந்த சிலையை செதுக்கி நிறுவினார்.

    திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் இதன் பீடமும், 95 அதிகாரங்களைக் கொண்ட பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலை குறிக்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் சிலையின் உயரம் 133 அடி உயரத்தில் நிறுவப்பட்டது. இந்த சிலை 150 சிற்பக்கலைஞர்கள் மூலம் தினம் 16 மணி நேரம் 4 ஆண்டுகள் தொடர் உழைப்பின் மூலம் உருவானது.

    சிலையின் அமைப்பு பணியையும் முன்னேற்றத்தையும் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தினம் தினம் கவனித்து அவரது தனிப்பட்ட மேற்பார்வையில் சிலை அமைக்கும் பணி நடைபெற்றது. 1996-ம் ஆண்டு ரூ.6 கோடியே 11 லட்சம்செலவில் இந்தசிலை நிர்மாணிக்கப்பட்டது.

    இவ்வளவு பெரிய கல்லால் ஆன சிலை உலகிலேயே வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிலையை வடிவமைத்த டாக்டர் கணபதி ஸ்தபதி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சிலையை சீரமைத்து, ரசாயன கலவை பூச வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன்படி கடந்த 2000-ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த சிலை 2004, 2008, 2011, 2017 ஆகிய ஆண்டுகளில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைக்கப்பட்டு ரசாயன கலவை பூசப்பட்டது. இதற்காக ஜெர்மனி , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த ரசாயன கலவை இறக்குமதி செய்யப்படும்.

    சிலை சீரமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் தற்போது சிலை புனரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இது குறித்து தமிழக சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரிகள் நேற்று இணைய வழி கூட்டத்தை நடத்தி இது குறித்து விவாதித்தனர். ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் சிலையை சீரமைக்கவும் ரசாயன கலவை பூசவும் திட்டம் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடையில் அரசின் தொல்லியல்துறை அதிகாரிகள் சில தினங்களில் நேரடியாக வந்து ஆய்வு செய்ய உள்ளனர். இதனைத்தொடர்ந்து சிலை புனரமைப்பு பணி தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×