search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை வனப்பகுதியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்.
    X
    உடுமலை வனப்பகுதியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்.

    உடுமலை வனப்பகுதியில் படர்ந்து வளரும் சீமைகருவேல மரங்கள்

    உடுமலை வனப்பகுதியிலும், சம தளப்பரப்புகளிலும் வளர்ந்து வருகின்ற சீமைகருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    உடுமலை:

    சீமைகருவேல மரங்களை அழிக்கக்கோரி பரவலாக கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி சீமைகருவேல மரங்களை அழிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஆனால் அந்த பணிகள் முழுமையாக முடிவடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை அமராவதி வனச்சரகத்தின் ஒருபகுதியில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களும் வனத்துறையினர் சார்பில் வேரோடு அகற்றப்பட்டது. ஆனால் அதுவும் முழுமையாக முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 

    இதனால் வனப்பகுதியில் சிதறிக்கிடக்கின்ற விதைகள் அடிவாரப்பகுதியில் உள்ள அணைப்பகுதிக்கு மழைநீரில் அடித்து வரப்படுகிறது. பின்பு அங்கிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பின் போது குளம், குட்டைகள், விளைநிலங்கள், ஏரியின் கரைகளுக்குச் சென்று தானாகவே வளர்ந்து வருகிறது.அதன் பரவலை கட்டுப்படுத்தி அளிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

    மேலும் சீமைகருவேல காய்கள் யானைகளுக்கு பிடித்தமான உணவு என்பதால் அதை விரும்பி உண்கின்றன. இதற்காக அடிவாரப்பகுதிக்கு வருகை தரும் யானைகள் காய்களை தின்றுவிட்டு விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவதும் தொடர்கதையாக உள்ளது.

    அத்துடன் யானைகளுக்கு ஜீரணசக்தி குறைவு என்பதால் சீமைக்கருவேல மரத்தின் விதைகள் அதன் சாணத்தின் மூலமாகவே மீண்டும் பூமிக்கு வந்து யானை செல்லுமிடமெல்லாம் பரவலை தொடர்ந்து வருகிறது.

    எனவே வனப்பகுதியிலும், சம தளப்பரப்புகளிலும் வளர்ந்து வருகின்ற சீமைகருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    Next Story
    ×