search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தேவையின்றி வீதியில் திரிந்த 9 பேருக்கு கொரோனா- போலி முகவரி கொடுத்து மாயமானவர்களை தேடும் போலீசார்

    சாலைகளில் தேவையின்றி சுற்றிய 82 பேரை மடக்கிய போலீசார் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் பலர் இதனை மீறி வீதிகளில் வாகனங்களில் சுற்றி வருகின்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர். ஆனாலும் வாகனங்களில் திரிவோர் குறைந்தபாடில்லை.

    இதனை தொடர்ந்து தேவையின்றி சுற்றி திரிபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முறையை கொண்டு வந்தனர்.

    அதன்படி ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் சுற்றிதிரிந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் மருத்துவ காரணங்களை கூறியும், தடுப்பூசி போட செல்வதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    கோப்புப்படம்

    இருப்பினும் சாலைகளில் தேவையின்றி சுற்றிய 82 பேரை மடக்கிய போலீசார் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.

    இந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தபோது அதில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதற்காக சுகாதாரத்துறையினருடன் பாதிப்புக்குள்ளானவர்கள் கொடுத்த முகவரிக்கு சென்றபோது, அங்கு யாரும் இல்லை. இதனால் போலீசில் சிக்கியவர்கள் போலி முகவரி கொடுத்திருப்பது தெரியவர போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்ட 9 பேர் தற்போது எங்கு உள்ளார்கள்? அவர்களால் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசாரும், சுகாதாரத்துறையினரும் தொற்று பாதிப்புக்குள்ளான 9 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×