search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பிடிபட்ட 4 பேரையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்
    X
    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பிடிபட்ட 4 பேரையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்

    கர்நாடகாவில் இருந்து ரெயில், பரிசலில் கடத்தப்பட்ட 1,825 மதுபாட்டில்கள் பறிமுதல் - 8 பேர் கைது

    கர்நாடகாவில் இருந்து ரெயில், பரிசலில் கடத்தப்பட்ட 1,825 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கொளத்தூர்:

    தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றை கடந்து சேலம் மாவட்டம் கொளத்தூர் மற்றும் மேட்டூர் பகுதிகளுக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து செட்டிப்பட்டி பரிசல் துறை வழியாக மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக கொளத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை கொளத்தூர் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவிரி ஆற்றில் ஒரு பரிசல் வந்தது. அந்த பரிசலில் 4 பேர் இருந்தனர். அந்த பரிசல் கரைக்கு வந்ததும், அதில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பரிசலில் அட்டை பெட்டிகள் இருந்தன.

    விசாரணையில், அவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா குறுக்கலையனூரை சேர்ந்த சக்திவேல் (வயது 26), கோவிந்தராஜ் (32), கொங்கருப்பட்டியை சேர்ந்த மணி, செங்கப்பாடியை சேர்ந்த கணேசன் (18) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 27 அட்டை பெட்டிகளில் 1,296 மதுபாட்டில்களை கர்நாடகாவில் இருந்து கொளத்தூர் வழியாக மேட்டூருக்கு கடத்தி சென்றுள்ளனர். சாலை வழியாக சென்றால் போலீசில் சிக்கி விடுவோம் என்பதால் அவர்கள் காவிரி ஆற்றின் வழியாக பரிசலில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் 1,296 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேரையும் கைது செய்தனர்.

    இதனிடையே ரெயிலில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே ஐ.ஜி. சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் ரெயில்வே போலீஸ் நிலையங்களில் தனிப்படை அமைக்கப்பட்டு ரெயில்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 06232) ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த ரெயிலில் யாராவது மதுபாட்டில்கள் கடத்தி வருகிறார்களா? என போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோதண்டபாணி, சிவசக்தி வேலன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர்.

    எஸ் 7-வது பெட்டியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருச்சி மேலபுதூர் பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் (63) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் எஸ் 8-வது பெட்டியில் போலீசார் சோதனை நடத்திய போது அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(34), புதுக்கோட்டை பெருங்குடி பகுதியை சேர்ந்த ராஜா (34) மற்றும் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பிரசாந்த் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 519 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    போலீசார் விசாரணையில், அவர்கள் கர்நாடகாவில் மதுபாட்டில்களை வாங்கி ரெயிலில் கடத்தி வந்து தமிழகத்தில் கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் சேலம் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
    Next Story
    ×