search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆந்திராவில் இருந்து மது பாட்டில்கள் கடத்திய 6 பேர் கைது

    இருசக்கர வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 6 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருவள்ளூர்:

    கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை வருகிற 7-ந்தேதி வரை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், டீ கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் காலை முதல் பகல் 12 மணி வரை மதுக்கடைகள் இயங்குவதால் திருவள்ளூர் மாவட்ட எல்லை பகுதியான கனகம்மாசத்திரம் சென்று அங்குள்ள மதுக்கடைகளில் திருவள்ளூர் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. புகாரை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், ரவிச்சந்திரன், ராஜேந்திரன், அன்பு, மற்றொரு ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையான நாராயணபுரம் கூட்டு சாலையில் திடீர் வாகன சோதனை நடத்தினர்.

    அதில் இருசக்கர வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 6 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (வயது 42), சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜா (32), பேரம்பாக்கம் அய்யன் குளம் தெருவை சேர்ந்த குணசேகரன் (27), கடம்பத்தூர் வெண்மனம்புதூர் கிராமத்தை சேர்ந்த சம்பத் (43) ஆற்காடு குப்பம் காலனியை சேர்ந்த பாலாஜி (30), சோனு (24) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இது சம்பந்தமாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பிடிபட்ட 6 பேரிடம் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×