search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    குமரியில் மீண்டும் மழை- முள்ளங்கினாவிளையில். 7 மி.மீ. பதிவு

    தென்மேற்கு பருவமழை ஜூன் 3-ந் தேதி பெய்ய கூடும் என்று வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக சாரல் மழை பெய்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மற்றும் பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து கொட்டி தீர்த்த மழைக்கு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. வீடுகளும் இடிந்து சேதம் அடைந்தது.

    சேதமடைந்த வீடுகள் மற்றும் நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3-ந் தேதி பெய்ய கூடும் என்று வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக சாரல் மழை பெய்தது.

    நாகர்கோவிலில் நேற்று இரவு சுமார் அரைமணி நேரமாக சாரல் மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, சுருளோடு, அடையாமடை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. முள்ளங்கினாவிளை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இரவு மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தொடர்ந்து மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகள் நிரம்பி வழியும் நிலையில் அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.12 அடியாக இருந்தது. அணைக்கு 311 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 75 அடியாக உள்ளது. அணைக்கு 649 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 748 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. தொடர் மழைக்கு ஏற்கனவே 451 வீடுகள் இடிந்து இருந்த நிலையில் நேற்று மேலும் 11 வீடுகள் இடிந்து உள்ளது. தோவாளை தாலுகாவில் 5 வீடுகளும் கல்குளம் தாலுகாவில் 4 வீடுகளும் கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்தது.

    கடந்த ஒரு மாதத்தில் மழைக்கு 462 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. கடந்த 2 வாரமாக கொட்டி தீர்த்த கன மழை மற்றும் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்திருந்தது. வீடுகளை இழந்து தவித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 700 பேர் தங்கி இருந்த நிலையில் 550 க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5 நிவாரண முகாம்களில் 45 ஆண்களும் 59 பெண்களும் 45 குழந்தைகள் என 149 பேர் தங்கியுள்ளனர்.

    Next Story
    ×