search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெங்களூரில் இருந்து விழுப்புரத்துக்கு காய்கறி லாரியில் மறைத்து ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல்

    வெளிமாநிலங்களில் இருந்து சிலர் மதுபாட்டில்களை கடத்திவந்து விழுப்புரம் பகுதியில் விற்பனை செய்வதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுபடுத்தும்பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து சிலர் மதுபாட்டில்களை கடத்திவந்து விழுப்புரம் பகுதியில் விற்பனை செய்வதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தவவணம் சோதனை சாவடியில் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காய்கறி ஏற்றிவந்த மினிலாரியை போலீசார் தடுத்துநிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் மினிலாரியை சோதனை செய்தனர். அதில் காய்காறி மூட்டைகளுக்கு அடியில் ஏராளமான அட்டைபெட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அட்டைபெட்டிகளை போலீசார் திறந்துபார்த்தபோது அதில் 3,888 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

    இதுகுறித்து மினிலாரியில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அரகண்டநல்லூர் தணிகாலம்பட்டு பகுதியை சேர்ந்த ரவி (வயது 25), திருநாவலூர் அருகே உள்ள கிளியூர் பகுதியை சேர்ந்த அய்யனார் (30) என்பதும். இவர்கள் 2 பேரும் பெங்களூரில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி காய்கறி மூட்டைக்கு அடியில் மறைத்து வைத்து விழுப்புரத்துக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வளத்தி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட நானோதயம் பகுதியில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் அன்பரசி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அபபோது அந்த வழியாக இரும்பு ஏற்றிவந்த லாரியை போலீசார் தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர். அதில் 93 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரனை நடத்தினர். அதில் அவர் விழுப்புரம் அண்டராயநல்லூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 39) என்பதும், ஐதராபாத்தில் இருந்து லாரியில் இரும்பு ஏற்றிவந்தபோது மதுபாட்டில்களையும் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ரமேசை கைது செய்தனர். 

    Next Story
    ×