என் மலர்

  செய்திகள்

  ஒரே குடும்பத்தில் பலியான 6 பேரை படத்தில் காணலாம்.
  X
  ஒரே குடும்பத்தில் பலியான 6 பேரை படத்தில் காணலாம்.

  ‘காவு’ வாங்கிய கொரோனா-தவிக்கும் கிராம மக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் வெள்ளிரவெளி கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேர் உள்பட 25 பேர் கொரோனாவால் பலியான நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் தவித்து வருகின்றனர்.
  குன்னத்தூர்:

  திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே  உள்ள  வெள்ளிரவெளி  கிராமம் கிழக்கு வீதியை  சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் தெய்வராஜ் (வயது  42).    கடந்த  ஒரு மாதத் திற்கு முன்பு  உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக  கோவை சென்று வந்தார். பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 9-ந்தேதி  இறந்தார். 

  இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்ட தெய்வராஜ் மனைவி சாந்தி கடந்த
  16-ந்தேதி இறந்தார். தெய்வ ராஜின்  சகோதரர்கள் ராஜா( 50), சவுந்தரராஜன்(45) ஆகி யோரும் தொற்றால் பாதிக்கப்பட்டு 20-ந்தேதி  இறந்தனர். இந்தநிலையில் தெய்வராஜின் மற்றொரு சகோதரரான தங்கராஜ் ( 52) கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.  ஒரே குடும்பத்தில் 5பேர் கொரோனாவால் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

  இந்தநிலையில் 4மகன்களும் இறந்த தகவலை அவர்களது தாய் பாப்பாளிடம்(70) உறவினர்கள் தெரிவிக்கவில்லை. சில நாட்களாக தனது மகன்களை காணாமல் தவித்த பாப்பாள் உறவினர்களிடம் எங்கே என்று கேட்ட போது , மகன்களும், மருமகளும் இறந்த விவரத்தை தெரிவித்துள்ளனர். 

  அதிர்ச்சியில் உறைந்த பாப்பாள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 6 பேர் பலியானதால் சோகத்தில் மூழ்கிய அந்த கிராமமக்கள் இன்னும் அதில் இருந்து மீள முடியாமல் உள்ளனர். 
  வெள்ளிரவெளி கிராமமானது நெசவாளர்கள் நிறைந்த கிராமமாகும். சுமார் 4ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளது. நெசவு பிரதான தொழிலாக இருந்தாலும் கொரோனாவால் பலியான சகோதரர்கள் 4பேருமே கட்டிட காண்டிராக்டர்கள்.பெரும்பாலும் வெளி மாநிலங்களில் கட்டிட காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தனர்.வசதி வாய்ப்புடன் தேனீ கூட்டம் போல் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.தனித்தனி வீடுகளில் வசித்து வந்தாலும் ஏதாவது விசேஷம் என்றால் அனைவரும் ஒன்று கூடி விடுவார்கள்.  மேலும் ஒவ்வொரு வீட்டினரும் தாங்கள் சமைக்கும் உணவினை பரிமாறி கொள்வார்கள்.

  அதுபோல் கடந்த மாதம் கட்டிட தொழில் சம்பந்தமாக தெய்வராஜ் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சென்றார். அங்கிருந்து சுமார் 40 கிலோ மீன்களை வாங்கி கொண்டு ஊருக்கு வந்துள்ளார். அதனை தனது சகோதரர்கள் ராஜா, சவுந்திரராஜன், தங்கராஜ் ஆகியோரது குடும்பத்திற்கு பிரித்து கொடுத்துள்ளார். அதனை அனைவரும் பிரிட்ஜில் வைத்து அவ்வப்போது சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். 

  இடையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக கோவை சென்று வந்தார்.  அதன்பிறகுதான் தெய்வ ராஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை அறியாமல் வீட்டிலேயே இருந்து காய்ச்சலுக்கானமாத்திரைகளை மருந்து கடைகளில் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். 
   
  இடையில் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து வந்துள்ளார். கொரோனா தாக்கம் முற்று மூச்சுத்திணறல் ஏற்படவே தெய்வராஜை உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். ஆனால் அதற்குள் கொரோனா தெய்வராஜின் சகோதரர்கள் 3 பேர் மற்றும் மனைவிக்கும் பரவி விட்டது. அனைவரும் அடுத்தடுத்து ஈரோடு, கோவை, திருப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 5பேருமே அடுத்தடுத்து பலியாகி விட்டனர்.மற்றொரு சகோதரர் வரதராஜ் தற்போது கொரோனாவால்  பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

  தெய்வராஜ் வாங்கி வந்த மீன்கள் மூலம் கொரோனா தொற்று பரவியதாக அந்த கிராமமக்கள் சிலர் கூறுகின்றனர்.கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பரவியதாகவும்  கூறப்படுகிறது. 
  தெய்வராஜ்க்கு தொற்று கண்டறியப்பட்டதுமே சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதாரித்து செயல்பட்டு இருந்தால் வெள்ளிரவெளி கிராமத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம் என்றும், அதிகாரிகளின் மெத்தனபோக்கே தற்போதைய நிலைக்கு காரணம் என்றும்  அப்பகுதி கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தற்போது அங்கு கொரோனாவால் 25 பேர் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர்.

  முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 25 பேர் வரை பலியாகி உள்ளதால் அந்த கிராமமக்கள் பீதியில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பிழைப்புக்காக அந்த கிராமத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். பொதுமக்கள் பலர் உணவின்றி வீடுகளுக்குள்ளேயே தவித்து வருகின்றனர். தன்னார்வலர்கள் மூலம் கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். ஒரு மாதமாக நெசவு தொழில் முடங்கியதால் பலர் வருமானமின்றி தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழக அரசு வழங்கிய ரூ.2ஆயிரம் செலவுக்கு சற்று கைகொடுப்பதாக கூறும் பொதுமக்கள் வெள்ளிரவெளி கிராமத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

  இது குறித்து அந்த கிராமத்தில் விசைத்தறி கூடம் நடத்தி வரும் காளியப்பன் என்பவர் கூறியதாவது:-

  தெய்வராஜ் கொரோனாவால் பலியானதுமே ஊராட்சி நிர்வாகம்  உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி, உயிர்பலியையும் தடுத்திருக்கலாம். ஆனால் உயிர்பலிகள் ஏற்பட்ட பிறகே ஊராட்சி நிர்வாகம்  தடுப்பு பணியில் களமிறங்கியுள்ளது. எப்போதும் பரபரப்பாக இயங்கும் கிராமம் இன்று கொரோனாவால் முடங்கி கிடக்கிறது.30க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
  இப்போது எங்கள் கிராமத்தில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.எல்லாம் முடிந்த பிறகு நடவடிக்கை எடுத்து என்ன பயன்? ஒட்டு மொத்த மக்களுமே கொரோனா பீதியால் தவித்து வருகின்றனர்.20 ஆயிரம் நெசவு தொழிலாளர்கள் வருமானமின்றி தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.எனவே வெள்ளிரவெளி கிராமத்தில் கொரோனாவை  முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். 

  ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், இக்கிராமத்தில் கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். ஆரம்ப நிலையில் மக்கள் சிகிச்சைக்கு வராமல் நோய் முற்றிய பிறகு வருகின்றனர்.பரிசோதனைக்கே தயக்கம் காட்டுகின்றனர். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற மக்கள் முன்வர வேண்டும் என்றனர். 

  கொரோனாவால் பலியான தெய்வராஜ்-சாந்தி தம்பதியருக்கு 13 வயதில் மகன், 12 வயதில் மகள் உள்ளனர். ராஜாவுக்கு17 வயதில் மகன் உள்ளார். சவுந்தர்ராஜனுக்கு 2மகன், ஒரு மகள்  உள்ளனர். இதில் 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. தங்கராஜ்க்கு  2மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. தந்தைகளை இழந்து தவித்து வரும் அந்த குடும்பத்தினருக்கு அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×