search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    லட்சத்தீவு விவகாரம்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

    குற்றங்கள் மிக மிக அரிதான லட்சத்தீவுகளில் மத்திய அரசு குண்டர் சட்டத்தை ஏன் கொண்டு வருகிறது? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
    சென்னை:

    இந்திய யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவும் ஒன்று. மொத்தம் 36 தீவுக்கூட்டங்களை லட்சத்தீவுகள் உள்ளடக்கியுள்ளது. இதில் 10 தீவுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். 11-வது தீவில் வணிக பயன்பாட்டிற்காக ஓட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக ப்ரபுல் ஹடா படேல் செயல்பட்டுவருகிறார். ப்ரபுல் ஹடா படேல் தலைமையிலான நிர்வாகம் சமீபத்தில் லட்சத்தீவில் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 2021-ஐ அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. 

    இந்த சட்டம் லட்சத்தீவில் மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடைவிதிக்க வழிவகுக்கிறது. அதேபோல், மது அருந்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், சட்டவிரோதமாக மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசைகளை அப்புறப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட உள்ளது. 

    இந்த நடவடிக்கைகள் லட்சத்தீவுகளில் சுற்றுலாத்துறையை மேற்படுத்த எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் சமூக எதிர்ப்பு தடுப்பு சட்டமும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

    இந்தநிலையில், லட்சத்தீவு எடுக்க உள்ள இந்த முடிவுகளுக்கு பாஜக தவிர எஞ்சிய உள்ளூர் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    லட்சத்தீவு விவகாரத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குற்றங்கள் மிக மிக அரிதான லட்சத்தீவுகளில் மத்திய அரசு குண்டர் சட்டத்தை ஏன் கொண்டு வருகிறது?

    அந்தத் தீவுகளில் வாழ்கின்ற சிறுபான்மைப் பிரிவு மக்களை அச்சுறுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை வன்மையாக நாட்டு மக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

    மத்தியில் உள்ள பாஜக அரசு லடசத்தீவுகளை ஒரு காலனியைப் போல் நடத்துகிறது

    கோப்புபடம்

    அங்கு வாழும் சுமார் 70000 மக்கள் மீது பாஜக அரசு எவ்வளவு வெறுப்பும் காழ்ப்பும் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது

    அவர்கள் உணவு முறைகளில் அரசு தலையிடுவதற்கு அரசுக்கு எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×