search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சேலத்தில் 2வது நாளாக மழை- சூறைக்காற்றால் சாலையில் சாய்ந்த புளிய மரங்கள்

    சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அயோத்தியாப்பட்டணத்தில் சாலையோரம் நின்ற பெரிய புளியமரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அம்மாப்பேட்டை, அயோத்தியாப்பட்டணம் சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது.

    சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அயோத்தியாப்பட்டணத்தில் சாலையோரம் நின்ற பெரிய புளியமரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சேலம்-அரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராமர் கோவில் அருகே சாலையோரம் நின்ற மரம் முறிந்து அங்குள்ள டீக்கடைகள் மீது விழுந்தது. இதனால் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாததிக்கப்பட்டது.

    மேலும் மின் கம்பம் உடைந்து கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டனர். பின்னர் மின் ஊழியர்கள் விரைந்து சென்று அதனை சரி செய்தனர்.

    சேலம் மாநகரில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. நேற்றும் மாலை 6 மணிக்கு மேல் கரு மேகங்கள் திரண்டு மழை தூறியது. இதனால் கன மழை பெய்யும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சிறு தூறலுடன் மழை நின்று விட்டதால் ஏமாற்றமே மிஞ்சியது.

    சேலம் ஏற்காடு சாலையில் கோர்ட் அருகே சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த போலீசார் மரத்தை வெட்டி அகற்றினர்.

    Next Story
    ×