search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை நிரம்பி வழியும் அழகிய காட்சி.
    X
    செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை நிரம்பி வழியும் அழகிய காட்சி.

    நெல்லை, தென்காசியில் தொடரும் மழை- பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 10 அடி உயர்வு

    மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 3,595 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இன்று காலை வினாடிக்கு 335 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டி தொடங்கியதால் அக்னி நட்சத்திர காலத்திலும் இதுவரை இல்லாத அளவு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மற்ற பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை, பாளை பகுதியில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை இன்று காலை வரை இடைவிடாது விட்டு விட்டு பெய்தது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 72 மில்லி மீட்டர் மழை பெய்தது. நெல்லை, தென்காசி மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 9,564 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 467 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்த பாபநாசம் நீர்மட்டம் இன்றும் அதிகரித்து உள்ளது. நேற்று 119.60 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து இன்று காலை 129.15 அடியாக உயர்ந்தது.

    பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு 143 அடியாகும். அணை நிரம்ப இன்னும் 14 அடி மட்டுமே தேவை. சேர்வலாறு அணை நீர்மட்டம் 135.30 அடியாக இருந்தது. ஒரே நாளில் 16 அடி உயர்ந்து இன்று காலை 151.41 அடியாக உள்ளது. இந்த அணை நிரம்ப இன்னும் 5 அடி தண்ணீர் மட்டுமே தேவை.

    மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 3,595 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இன்று காலை வினாடிக்கு 335 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று காலை 84.10 அடியாக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் சிறிய அணையான குண்டாறு அணையில் நேற்று முன்தினம் 30 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 33.25 அடியாக உயர்ந்தது. இன்று மேலும் அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    கடனாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து இன்று 72 அடியாகவும், ராமநதி நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்து இன்று 60 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 56.45 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 27.25 அடியாகவும் உள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 42.49 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.53 அடியாகவும் தொடர்ந்து உள்ளது.

    செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணை பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரு நாளில் அதிகபட்சமாக 72 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்று 54 அடியாக இருந்த அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 26 அடி உயர்ந்து இன்று காலை 80 அடியாக உள்ளது.

    குற்றாலம் ஐந்தருவி

    குற்றாலத்தில் இன்று 2-வது நாளாகவும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி நேரடியாக தண்ணீர் தடாகத்திற்குள் விழுகிறது. குளிப்பதற்காக பொதுமக்கள் நடந்து செல்லும் படிக்கட்டிலும் தண்ணீர் ஆறு போல் ஓடுகிறது.

    ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 5 கிளைகளும் ஒரே கிளையாக வெள்ளமாக கொட்டுகிறது. பழைய குற்றாலத்தில் தண்ணீர் அதிகளவு சீறி பாய்ந்து நடைபாதையில் விழுகிறது. இதனால் அங்கும் தண்ணீர் படிக்கட்டுகளில் ஆறுபோல் ஓடுகிறது.

    இதுபோல பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணை அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் குளிக்க முடியாத அளவு வெள்ளமாக கொட்டுகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார்-72, பாபநாசம்-41, தென்காசி-36.6, சேர்வலாறு-28, அம்பை-27, கடனாநதி-27, கொடு முடியாறு-25, ஆய்க்குடி-24, குண்டாறு-24, நாங்குநேரி-23, நம்பியாறு-23, மணிமுத்தாறு-20.4, கன்னடியன் -20.2, சங்கரன்கோவில்-17, கருப்பாநதி-17, சிவகிரி-15, சேரன்மகாதேவி-14.4, செங்கோட்டை-14, மூலக்கரைப்பட்டி-12, ராதாபுரம் -11, களக்காடு-10.6, ராம நதி-10, நெல்லை-6.4, பாளை-6.



    Next Story
    ×