search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் மெகராஜ்
    X
    கலெக்டர் மெகராஜ்

    நாமக்கல் மாவட்டத்தில் காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய 2,800 பணியாளர்கள் - கலெக்டர் மெகராஜ் தகவல்

    நாமக்கல் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி மற்றும் இருமல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறியும் பணியில் 2,800 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    நாமக்கல்:

    கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இதனிடையே ‌கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் நோய் பாதிப்பு உள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் வசிப்பவர்கள் வெளியே செல்வது தடுக்கப்பட்டு, நோய் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதிகளில் வேறு யாருக்காவது காய்ச்சல், சளி மற்றும் இருமல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2,800 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் என 2,800 பேர் நகர் மற்றும் கிராமப்புறங்களில் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி போன்ற பாதிப்பு உள்ளவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பசியின்றியும், சுவை மற்றும் மணம் தெரியாமலும் யாரேனும் உள்ளனரா? என்பதையும் அவர்கள் கேட்டறிவார்கள்.

    அத்தகைய பணியின்போது உடல்நல பாதிப்புடன் யாரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக அவர்கள் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா சிகிச்சை மையம் அல்லது அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். இதன் மூலம் தொடக்கத்திலேயே நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை பெற்று விரைவில் குணமடைய முடியும். முதல் கட்டமாக பணியாளர்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ள இடங்களில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு அறிகுறி உள்ளவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு கலெக்டர் மெகராஜ் கூறினார்.
    Next Story
    ×