search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலம்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மு.பெ.
    X
    வேலம்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மு.பெ.

    திருப்பூர் மாநகராட்சியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் அமைச்சர் ஆய்வு

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வேலம்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மற்றும் திருப்பூர் தெற்குசட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் முன்னிலையில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது அவர் கூறியதாவது:-
     
    தமிழக முதல்-அமைச்சர் அறிவுரையின் படி, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்துத்துறை அலுவலர்களுடனும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

    அதன்படி திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 100 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    இந்த நோயை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதல்-அமைச்சரால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழக அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையம்,  திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் சுமார் 300 படுக்கைகளுடன்அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் மற்றும் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தினையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், இணை இயக்குநர் (மருத்துவபணிகள்) சாந்தி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) ஜெகதீஸ்குமார், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெநாதன், மாநகர நல அலுவலர் பிரதீப், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×