search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் மெகராஜ் திறந்து வைத்து பார்வையிட்டபோது எடுத்த படம்.
    X
    கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் மெகராஜ் திறந்து வைத்து பார்வையிட்டபோது எடுத்த படம்.

    180 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் - கலெக்டர் மெகராஜ் திறந்து வைத்தார்

    ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் 180 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் மெகராஜ் திறந்து வைத்தார்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் திறந்து வைத்தார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு மையத்திற்கு ராசிபுரம் முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் சார்பில் 100 கட்டில்கள், மெத்தைகள், மற்றும் தலையணைகளையும், கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் அவரது குழுவினர் சார்பில் 239 போர்வைகளையும் கலெக்டரிடம் வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் தினசரி காலியாக உள்ள படுக்கைகளின் விவரங்கள், ஆக்சிஜன் இருப்பு, மற்றும் தேவைகள் குறித்து கண்காணிக்க இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களாக உள்ள மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மாவட்டங்களில் உள்ள விவரங்களை போர்க்கால அடிப்படையில் திரட்டி கொரோனா நோய் தொற்று ஏற்படும் நோயாளிகளுக்கு உதவ விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் படுக்கை வசதிகளின் விவரம், ஆக்சிஜன் இருப்பு, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை விவரங்களை தொகுத்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் வசதியுடன் கூடிய 40 படுக்கைகளும், 140 சாதாரண படுக்கைகளும் என மொத்தம் 180 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமார், ராசிபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஜெயந்தி, முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி (வநேந்ரா குரூப்ஸ்) செயலாளர் முத்துவேல் ராமசாமி, முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் மாதேஸ்வரன், முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விஜயகுமார், முத்தாயம்மாள் நினைவு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மணிகண்டன், ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், வெண்ணந்தூர் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் துரைசாமி, மாவட்ட தி.மு.க. பொருளாளர் வக்கீல் செல்வம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அருள், கோவிந்தராஜூ, அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் வனிதா செங்கோட்டையன், தொழில் அதிபர் ராஜகோபால், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சரவணன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×