search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மையப்பன் அக்கறை கிராமத்தில் உள்ள பாசன வாய்க்கால் பாலம் சேதம் அடைந்து இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    அம்மையப்பன் அக்கறை கிராமத்தில் உள்ள பாசன வாய்க்கால் பாலம் சேதம் அடைந்து இருப்பதை படத்தில் காணலாம்.

    கொரடாச்சேரி அருகே பாசன வாய்க்கால் பாலம் புனரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

    கொரடாச்சேரி அருகே பாசன வாய்க்கால் பாலம் புனரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    கொரடாச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் அக்கறை கிராமத்தில் ஓடம்போக்கி ஆற்றின் வடக்கு கரையில் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்காலை கடந்து செல்வதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய பாலம் ஒன்று கட்டப்பட்டது.

    மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் வகையில் இப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த பாலத்தின் ஒரு பக்க தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் பாலத்தின் நடை மேடையும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்து பாலத்தை புனரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    அடுத்த மாதம் (ஜூன்) மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அணை திறக்கப்பட்டால் பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்லும். அப்போது இந்த பாலம் முற்றிலும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

    இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய இந்த பாலத்தில் அதிக பாரம் ஏற்றி டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் சென்றதால் பாலத்தின் ஒரு பக்க தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் ஓடம்போக்கி ஆற்றில் இருந்து அடிக்கடி டிராக்டர்கள் மூலம் மணல் ஏற்றி செல்வதாகவும், அவ்வாறு சென்ற வாகனத்தால் பாலம் சேதம் அடைந்து இருக்கலாம் என கிராம மக்கள் கூறுகிறார்கள்.

    கிராம மக்களின் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தை உடனடியாக பழுதுநீக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலம் எப்படி சேதம் அடைந்தது? என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×