search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    வடசென்னையில் 5 மண்டலங்களில் நோய் தொற்று அதிகரிப்பு

    கொரோனா தொற்று அதிகரித்துள்ள இடங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினசரி பாதிப்பு 7 ஆயிரத்து 500-ல் இருந்து 6 ஆயிரமாக குறைந்துள்ளது. இருப்பினும் நோய் தொற்று குறைவாக இருந்த பகுதிகளில் அதன் தாக்கம் மேலும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

    கோப்புப்படம்

    நேற்று 6 ஆயிரத்து 73 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 47 ஆயிரத்து 667 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4 லட்சத்து 62 ஆயிரத்து 448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    கடந்த 9-ந்தேதியில் இருந்து வடசென்னையில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 மண்டலங்களிலும் 22.8 சதவீதம் அளவுக்கு நோயின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    இந்த 5 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளது. ஒரு தெருவில் 10 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டால், அந்த தெருவை மாநகராட்சி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த மண்டலங்களில் ஏப்ரல் 28-ந்தேதி முதல் மே 9-ந்தேதி வரையில் கொரோனா பாதிப்பு 4 சதவீதமாகவே இருந்தது. தற்போது அது பல மடங்கு அதிகரித்துள்ளது.

    மற்ற மண்டலங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மணலி பகுதியில் நோய் கட்டுப்பாடு பகுதிகள் அதிகளவில் அதிகரித்துள்ளன.

    இதேபோன்று மாதவரம் பகுதியிலும் நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. 7-வது மண்டலத்துக்கு உட்பட்ட அம்பத்தூரிலும் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. தேனாம்பேட்டை பகுதியிலும் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. அடையாறு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    177-வது வார்டுக்குட்பட்ட வேளச்சேரி பகுதியில் 22 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியாகவும், 123-வது வார்டுக்கு உட்பட்ட பீமன் பேட்டை பகுதியில் 22 தெருக்களும் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளன. 

    175-வது வார்டுக்குட்பட்ட அடையாறு பகுதியிலும், 134-வது வார்டுக்குட்பட்ட கோடம்பாக்கம் பகுதியிலும் 20 தெருக்கள் நோய் தொற்றால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    கடந்த 9-ந்தேதி சென்னையில் நோய் தொற்று அதிகமுள்ள தெருக்கள் பற்றிய கணக்கெடுப்பில் 725 தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தது தெரியவந்துள்ளது.

    அது அடுத்த ஒரு வாரத்தில் மளமளவென உயர்ந்துள்ளது. மே 17-ந் தேதியன்று சென்னை மாநகராட்சி மேற்கொண்ட கணக்கெடுப்பில் நோய் அதிகரித்த தெருக்களின் எண்ணிக்கை 890 ஆக உயர்ந்துள்ளது.

    இதையடுத்து கொரோனா தொற்று அதிகரித்துள்ள இடங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
    Next Story
    ×