search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா தனிமையை மீறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தனிமைப்படுத்துதலை மீறினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    மக்கள் அதிக அளவில் வசிக்கும் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசும், சென்னை மாநகராட்சியும் இணைந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் சென்று வர இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் தொடர்ந்து வெளியில் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

    இதற்கிடையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பது நடைமுறையில் உள்ளது. அதேபோல் காய்ச்சல், சளி போன்ற அறிகுறியுடன் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் முடிவு வரும் வரை வெளியில் செல்லக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்த நபர்கள் எந்தவித அச்சமின்றி சாதாரணமாக வெளியில் நடமாடுகிறார்கள். இதனால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று எளிதில் பரவும் சூழ்நிலை உருவாகிறது. கொரோனா செயினை துண்டிப்பதற்கான வழி இல்லாமல் போய் விடுகிறது.

    கோப்புப்படம்

    இதை தடுப்பதற்காக கொரோனா வழிகாட்டுதல்படி தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. அவரது குடும்பத்தினரும் வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினால் முதல் முறை 2 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். 2-வது முறை கொரோனா மையத்தில் அடைக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.

    மேலும், நடமாடும் நபர்களை குறித்து 044-25384520 என்ற எண்ணிற்கு அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×