search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழகியபாண்டியபுரம் பழையாறு புரவு பகுதியில் வாழைகள் சேதமடைந்து கிடந்த காட்சி.
    X
    அழகியபாண்டியபுரம் பழையாறு புரவு பகுதியில் வாழைகள் சேதமடைந்து கிடந்த காட்சி.

    குமரி மாவட்டத்தில் கனமழைக்கு மேலும் 29 வீடுகள் இடிந்து சேதம்

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் மேலும் 29 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
    நாகர்கோவில்:

    தெற்கு அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினமும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, கொட்டாரம், மைலாடி, குளச்சல் மற்றும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர் மட்டம் கிடு...கிடு...வென உயர்ந்து வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் நிரம்பி வருவதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணைகளை கண்காணித்து வருகிறார்கள். 48 அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 43.05 அடியாக உள்ளது. அணைக்கு 1,404 கன அடி, தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 521 கன அடி தண்ணீரும், உபரி நீராக 234 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 62.30 அடியாக உள்ளது. அணைக்கு 1,416 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.87 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர் மட்டம் 12 அடியாகவும் உள்ளது. இதையடுத்து குழித்துறையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். குழித்துறையாறு, கோதையாறுகளில் வெள்ளம் கரை புரண்டு செல்கிறது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து வெள்ளம் கொட்டி வருகிறது. வள்ளியாறு, பரளியாறு, குற்றியாறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது.

    குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விபரம் வருமாறு :-

    பேச்சிப்பாறை - 8.4, பெருஞ்சாணி- 36.4, சிற்றார் 1- 15.2, சிற்றார் 2 - 7, புத்தன்அணை- 37.2, முக்கடல்-16, மாம்பழத்துறையாறு-10.4, களியல்- 12, திற்பரப்பு - 12.8, குளச்சல் - 34.4, குருந்தன்கோடு 2.2, அடையாமடை- 26, கோழிப்போர்விளை -9. முள்ளங்கினாவிளை 8, நாகர்கோவில் 10, பூதப்பாண்டி -8, சுருளோடு - 31.6, கன்னிமார் - 17.4, ஆரல்வாய்மொழி -6.4, பாலமோர்- 13.2, மைலாடி - 12.2, கொட்டாரம் - 2.2, நிலப்பாறை 4.2, ஆனைக்கிடங்கு -10.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

    தாழ்வான குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்களில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தொடர் மழையின் காரணமாக நேற்று முன்தினம் 27 வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு வீடும், தோவாளை, கல்குளம், திருவட்டார் தாலுகாக்களில் தலா 3 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 15 வீடுகளும் என மேலும் 29 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் 56 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சூறைக்காற்றிற்கு மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளன.

    அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி, முக்கடல், அருமநல்லூர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசமாகி உள்ளன. தக்கலை, திக்குறிச்சி, மார்த்தாண்டம், பொற்றையடி, சுசீந்திரம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். அவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×