search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை
    X
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டு உள்ளது.
    தூத்துக்குடி:

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம், ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

    இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள அனைத்து மோட்டார்களும் இயக்கி பரிசோதிக்கப்பட்டன. உற்பத்தி நிலையம் முழுமையாக பராமரிக்கப்பட்டது. அதன்பிறகு மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. அதன்படி 5 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலை

    இதைத்தொடர்ந்து உற்பத்தி நிலையத்தில் உள்ள குளிர்விக்கும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இந்த பழுதை சரிசெய்யும் பணியில் ஸ்டெர்லைட் நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பழுதை சரிசெய்வதற்காக இஸ்ரோ மையத்தில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்தனர். அவர்கள் இணைந்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், பழுது கண்டுபிடிக்கப்பட்டு இன்று சரி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஆலையில் முறையாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறதா? என்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை படிப்படியாக இயக்கி சோதனை செய்து வருகின்றனர். இதில் பழுது முழுமையாக சரிசெய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டால், தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×