search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐந்தருவியில் ஆர்ப்பரித்த வெள்ளம்.
    X
    ஐந்தருவியில் ஆர்ப்பரித்த வெள்ளம்.

    நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு

    கோடை காலத்தில் வெயில் காரணமாக அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் அணைகளில் நீர்மட்டம் ‘கிடுகிடு’ வென உயர்ந்து வருகிறது.

    தென்காசி:

    அரபிக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது.

    நெல்லை மாவட்டம் பணகுடி, வள்ளியூர், களக்காடு பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

    களக்காடு ஐந்து கிராமம் பகுதியில் திடீரென்று பெய்த பலத்த மழை காரணமாக தரைப்பாலம் உடைந்து சேதம் ஏற்பட்டது. ஏராளமான பப்பாளி மரங்கள், முருங்கை மரங்கள் உள்ளிட்ட பல வகை மரங்களும் முறிந்து விழுந்தன.

    பலத்த மழை காரணமாக நேற்று குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டியது.

    இன்று 2-வது நாளாகவும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது. இன்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை வரை பாபநாசம் அணைப்பகுதியில் 40 மில்லி மீட்டர் மழை பெய்தது. கொடுமுடியாறு அணை பகுதியிலும் 40 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    கோடை காலத்தில் வெயில் காரணமாக அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் அணைகளில் நீர்மட்டம் ‘கிடுகிடு’ வென உயர்ந்து வருகிறது.

    பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 2,629 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 254 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 105.60 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 116.40 அடியாக இருந்தது. ஒரேநாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 119.36 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 734 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 325 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் நேற்று 85 அடியாக இருந்த நீர்மட்டம், ஒரு அடி உயர்ந்து இன்று 86 அடியாக உள்ளது.

    அடவிநயினார் அணை கோடை வெயிலில் வறண்டு கிடந்தது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று ஒரேநாளில் நீர்மட்டம் 25 அடியாக உயர்ந்தது. இன்று அணைக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் 8 அடி உயர்ந்து 33 அடியாக உள்ளது.

    ராமநதி அணை நீர்மட்டம் 52 அடியாகவும், கடனாநதி அணை 65.90 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 48.89 அடியாகவும், குண்டாறு நீர்மட்டம் 29.12 அடியாகவும் உள்ளது. வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 42.49 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 12.53 அடியாகவும் உள்ளது.

    கொடுமுடியாறு அணை நேற்று முன்தினம் வரை வறண்டு காணப்பட்டது. அன்று பெய்த மழை காரணமாக நீர்மட்டம் 6.75 அடியாக உயர்ந்து இருந்தது. இந்தநிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஒரேநாளில் 9 அடி உயர்ந்து இன்று காலை நீர்மட்டம் 15 அடியாக உள்ளது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தென்காசி- 42.4, பாபநாசம்- 40, கொடுமுடியாறு- 40, அடவிநயினார்-35, சேர்வலாறு- 33, களக்காடு 28.4, ஆய்க்குடி- 22, குண்டாறு- 19, செங்கோட்டை- 18, நாங்குநேரி- 16.5, ராதாபுரம்- 15, கருப்பாநதி- 13, சங்கரன்கோவில்- 11, அம்பை- 11, கன்னடியன் கால்வாய்- 11, மணிமுத்தாறு- 9.2, மூலைக்கரைப்பட்டி- 8, கடனாநதி-6, ராமநதி- 6, சேரன்மகாதேவி- 3.6, நம்பியாறு-3, பாளை- 2, சிவகிரி- 2, நெல்லை- 1.

    Next Story
    ×