search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    15 நாள் முழு ஊரடங்கு- டாஸ்மாக்கில் ரூ.2,020 கோடி வருவாய் இழப்பு

    ஊரடங்கு காரணமாக டாஸ்மாக், பத்திரப்பதிவு வருவாய், பெட்ரோல்-டீசலுக்கான வாட் வரி மற்றும் சேவை வரி ஆகியவற்றால் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

    ஆனால் வைரசின் பாதிப்பு அதிகரித்ததையடுத்து கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 15 நாட்கள் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

    மளிகை, காய்கறி கடைகள் மட்டும் மதியம் 12 மணிவரை செயல்பட முதலில் அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு அது காலை 10 மணி வரையாக மாற்றப்பட்டது.

    முழு ஊரடங்கு காரணமாக தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக், பத்திரப்பதிவு வருவாய், பெட்ரோல்-டீசலுக்கான வாட் வரி மற்றும் சேவை வரி ஆகியவற்றால் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    கோப்புப்படம்

    15 நாட்கள் முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் ரூ.2,020 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    டாஸ்மாக்கில் இருந்து கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் முழு ஊரடங்கால் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதால் அதனை ஈடு செய்ய மதுபானங்கள் விலையை அதிகரிக்கும் முடிவை அரசு எடுக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் அவர்கள் கூறும்போது, “கடந்த ஓராண்டாக மதுபானங்கள் விலை உயர்த்தப்படாததை சுட்டிக்காட்டி விலையை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    அதேபோல் பத்திரப்பதிவில் ரூ.500 கோடியும், பெட்ரோல்-டீசலில் அரசால் வசூலிக்கப்படும் வாட் மற்றும் சேவை வரியில் ரூ.386 கோடியும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் பத்திரப்பதிவில் நிலங்கள் பதிவுகள் மூலம் கடந்த 3 மாதங்களாக கிடைத்த வருவாயை கணக்கிட்டு இந்த 15 நாள் ஊரடங்கில் ரூ.500 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் சொத்துக்கள் பதிவுகள் மூலம் ரூ.1000 கோடிக்கு மேல் வருவாய் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து பெரும்பாலும் குறைந்ததால் பெட்ரோல்-டீசல் விற்பனை அதிகளவு சரிந்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பெட்ரோல்-டீசல் மூலம் கிடைக்கும் வாட் மற்றும் சேவை வரி வருவாய் தடைபட்டுள்ளது.

    ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 நாட்கள் ஊரடங்கு காரணமாக தமிழக அரசுக்கு கிட்டத்தட்ட ரூ.2,900 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

    Next Story
    ×