search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஞாயிறு முழு ஊரடங்கு - தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்

    முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

    எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. 

    தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

    இதன்படி தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி மதியம் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது. 

    ஏ.டி.எம்., பெட்ரோல் டீசல் பங்க்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும். ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும். காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை. டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

    அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும். இ-பதிவு முறை நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். (https://eregister.tnega.org). ஏற்கனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தவாறு முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான நகரங்களில் முழு ஊரடங்கு காரணமாக இன்று சாலைகள் பரபரப்பு இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையில் பெரும்பாலான உணவகங்கள் எதுவும் செயல்படவில்லை. 407 அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. 

    கோப்புப்படம்

    அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் தகுந்த ஆவணங்களுடன் இயக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கில் தடையை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  சென்னையில் 10 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மாவட்ட எல்லைகளில் தீவிரமாக வாகன சோதனை (இ-பதிவு முறை இருந்தால் மட்டுமே அனுமதி) நடத்தப்பட்டு வருகிறது.  
    Next Story
    ×