search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    சென்னையில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று

    சென்னையை பொறுத்த வரையில் கொரோனா பாதிப்பு கடந்த 5 நாட்களாகவே சதவீத அளவில் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் சென்னையில் தான் நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

    தமிழகம் முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி இருக்கும் நிலையில் சென்னையில் தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்து இருந்தது.

    கடந்த 10, 11, 12 ஆகிய 3 நாட்களும் தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்து வேகமாக சென்றது.

    கடந்த 10-ந்தேதி அன்று 7,149 பேரும், 11-ந்தேதி 7,466 பேரும், 12-ந்தேதி 7,500 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள். ஆனால் 13-ந் தேதியில் இருந்து தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

    13-ந்தேதி 6,991 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கு மறுநாள் 6,538 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினசரி பாதிப்பு சற்று கூடுதலாகி 6,640 ஆக அதிகரித்து இருந்தாலும் 7 ஆயிரத்தை எட்டவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் வி‌ஷயமாகவே பார்க்கப்படுகிறது.

    சென்னையை பொறுத்த வரையில் கொரோனா பாதிப்பு கடந்த 5 நாட்களாகவே சதவீத அளவில் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொரோனா வைரஸ்

    சென்னையில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதியன்று தினசரி பாதிப்பு 7.3 சதவீதமாகவே இருந்தது. தினமும் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையை வைத்தும், அதில் கொரோனா பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்படுகிறது என்பதை கணக்கிட்டும் இந்த சதவீத கணக்கை அதிகாரிகள் போட்டுள்ளனர்.

    அந்த வகையில் அதிகபட்சமாக 28 சதவீதம் அளவுக்கு நோய்தொற்று உயர்ந்து இருந்தது. பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

    மே 11-ந்தேதி அன்று 25 சதவீதமாக இருந்த கொரோனா தொற்று அதற்கு அடுத்த நாள் 24 சதவீதமாக குறைந்தது. மே 13-ந்தேதி இது 22.6 சதவீதமானது. நேற்று முன்தினம் இந்த சதவீத கணக்கு மேலும் குறைந்துள்ளது.

    மே 14-ந்தேதியன்று 20.1 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அன்று 30,108 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6,538 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    சென்னையில் இதுவரை 4 லட்சத்து 32 ஆயிரத்து 344 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 46 ஆயிரத்து 367 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று 82 பேர் சென்னையில் உயிரிழந்து இருக்கும் நிலையில் கொரோனாவால் இதுவரை 5,703 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு பொதுமக்களின் அலட்சியமே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. பலர் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றுகிறார்கள். அதே நேரத்தில் முக கவசம் அணிந்திருக்கும் பலர் அதனை சரியாக அணிவதில்லை. காதுகளில் தொங்க விட்டுக்கொண்டு நடமாடுகிறார்கள்.

    பொது இடங்களில் சமூக இடைவெளியையும் சரியாக கடைபிடிப்பதில்லை. எனவே முழு ஊரடங்கு காலத்தில் வெளியில் வராமல் மக்கள் முழுமையாக கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மக்கள் இது போன்ற ஒத்துழைப்பை அளித்தால் விரைவில் சென்னையில் நோய் தொற்று மேலும் குறைவதற்கு வழி ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×