search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி அழைப்பை எடுத்து, குறைகளை கேட்டறிந்த போது எடுத்தபடம்.
    X
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி அழைப்பை எடுத்து, குறைகளை கேட்டறிந்த போது எடுத்தபடம்.

    உதவி கோரி ‘104' எண்ணுக்கு அழைத்த நோயாளியின் உறவினரிடம் பேசிய மு.க.ஸ்டாலின்

    கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது.
    சென்னை:

    கொரோனா கட்டளை மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த நேரத்தில் உதவி கோரி ‘104’ எண்ணுக்கு அழைத்த நோயாளியின் உறவினரிடம் பேசி, உடனடியாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

    கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பதவி ஏற்றது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முனைப்பு காட்டிவருகிறார்.

    தினமும் அரசு சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு, அது தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விடுகிறார். அந்த வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் ‘வார் ரூம்' என்று அழைக்கப்படும் கட்டளை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    அந்த கட்டளை மையத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகளை செய்து தருவது, ஆஸ்பத்திரிகளில் காலி படுக்கை வசதிகளை அறிந்து ஒழுங்கு செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்த கட்டளை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தனிச்செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத் மற்றும் தேசிய மக்கள் நலவாழ்வு திட்ட இயக்குனர் தாரேஸ் ஆகியோர் இருந்தனர்.

    கட்டளை மையத்தின் நடவடிக்கைகள், பணிகளை அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்த நேரத்தில் ‘104’ எண்ணுக்கு வந்த ஒரு அழைப்பை மு.க.ஸ்டாலின் எடுத்து பேசினார்.

    சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் இருந்து பங்கஜம் என்பவர் அந்த அழைப்பில் பேசினார். அவரிடம் மு.க.ஸ்டாலின், ‘‘நான் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன்... நீங்கள் யார்? நோயாளிகூட இருக்கிறீர்களா? எந்த ஏரியாவில் இருந்து பேசுகிறீர்கள்? ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டீர்களா, இல்லையா? நோயாளி தற்போது எந்த நிலையில் இருக்கிறார்?’’ என்று கேட்டார்.

    அப்போது அழைப்பில் பேசியவர், ‘‘இல்லை அய்யா... நாங்கள் இன்னும் ஆம்புலன்சில்தான் இருக்கிறோம்’’ என்றார். உடனே மு.க.ஸ்டாலின், உடனடியாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அந்த நோயாளியை அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

    கட்டளை மையத்தில் 25 நிமிடம் ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம், எவ்வித தொய்வும் இன்றி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘தமிழகத்தில் படுக்கைகள்-மருந்து கையிருப்பு-உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையத்தைப் பார்வையிட்டேன். கொரோனாவை கட்டுப்படுத்துதலில் தமிழகத்தில் நிலவிவந்த குழப்பங்களைச் சீராக்கி திறனுடன் கையாளும் பாதையில் வெகு விரைவாக பயணிக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×