search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    பெரம்பலூரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 5,398 பேருக்கு ரூ.11¼ லட்சம் அபராதம்

    அபராதம் விதிப்பது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய நோக்கமல்ல. மாறாக அனைவரையும் நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பதே முக்கிய நோக்கமாகும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசை பொருட்படுத்தாமலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியும் செயல்படுபவர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் சுகாதாரத்துறையினர், போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பொது இடங்களில் முககவசம் அணியாத பொதுமக்களுக்கு ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறும் பொதுமக்களுக்கு ரூ.500-ம், மேலும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணியாத பட்சத்தில், அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.

    அதன்படி கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை பின்பற்றாத வகையில் பெரம்பலூர் வட்டத்தில் 497 பேரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 700-ம், வேப்பந்தட்டை வட்டத்தில் 456 பேரிடம் இருந்து ரூ.92 ஆயிரத்து 700-ம், குன்னம் வட்டத்தில் 294 பேரிடம் இருந்து ரூ.63 ஆயிரத்து 300-ம், ஆலத்தூர் வட்டாரத்தில் 328 பேரிடம் இருந்து ரூ.77 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

    இதேபோல் சுகாதாரத்துறையின் மூலம் 711 பேரிடம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 100-ம், போலீசார் மூலம் ஆயிரத்து 909 பேரிடம் ரூ.4 லட்சத்து ஆயிரத்து 500-ம், பெரம்பலூர் நகராட்சியின் மூலம் 989 பேரிடம் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 100-ம், அரும்பாவூர் பேரூராட்சியின் மூலம் 72 பேரிடம் ரூ.15 ஆயிரமும், பூலாம்பாடி பேரூராட்சியின் மூலம் 27 பேரிடம் ரூ.5 ஆயிரத்து 400-ம், குரும்பலூர் பேரூராட்சியின் மூலம் 60 பேரிடம் ரூ.12 ஆயிரமும், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியின் மூலம் 55 பேரிடம் ரூ.11 ஆயிரமும் என மொத்தம் 5 ஆயிரத்து 398 பேரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 33 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    அபராதம் விதிப்பது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய நோக்கமல்ல. மாறாக அனைவரையும் நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பதே முக்கிய நோக்கமாகும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×