search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெறிச்சோடிய சாலை (கோப்புப்படம்)
    X
    வெறிச்சோடிய சாலை (கோப்புப்படம்)

    போலீசார்-அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு: 10 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன

    வருகிற திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் இ-பதிவு நடைமுறை மீண்டும் அமலுக்கு வருகிறது. வெளி மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது.

    தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி தினமும் 280-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

    தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை உள்பட முக்கிய நகரங்களில் ஆஸ்பத்திரிகளில் இடம் கிடைக்காமல் பலர் திண்டாடுகின்றனர்.

    தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் முன்பதிவு செய்து 30-க்கும் மேற்பட்டோர் தினமும் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது.

    நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அதையும் மீறி ஏராளமானோர் வாகனங்களில் வெளியில் சுற்றி வருகிறார்கள்.

    இதை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. நேற்று வரை மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டிருந்த கடைகள் இன்று (சனிக்கிழமை) முதல் காலை 10 மணிக்கு அடைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்ட கடைகள் 10 மணிக்கு அடைக்கப்பட்டன. காலை 9.55 மணிக்கே போலீசார் ரோந்து சென்று கடைகளை அடைக்குமாறு அறிவுறுத்தி சென்றனர்.

    அதன்படி ஒவ்வொரு கடைக்காரர்களும் காலை 10 மணிக்கு கடைகளை மூடி விட்டனர்.

    இன்று முதல் டீக்கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் தெருக்களில் மக்கள் கூட்டம் குறைந்து இருந்தது.

    காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகளுக்கும் இன்று முதல் அனுமதி மறுக்கப்பட்டதால் நடைபாதைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறி கடைகள் குளிர்சாதன வசதிகள் இன்றி இயங்கின. இந்த கடைகளும் காலை 10 மணியுடன் மூடப்பட்டது.

    ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தெருக்களில் வரும் வாகனங்களை போலீசார் மறித்து சோதனை செய்தனர். எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே செல்கிறீர்கள்? என்று விசாரித்தனர்.

    நியாயமான காரணமாக இருந்தால் மட்டுமே அந்த வாகனங்களை அனுமதித்தனர். மற்ற வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருசக்கர வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    கோப்புப்படம்

    தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். இதில் சென்னை நகரத்தில் மட்டும் 500 இடங்களில் அதிரடியாக வாகன சோதனை நடத்தப்பட்டது. தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் இன்று கடுமையாக எச்சரித்தனர். இதில் ஊரடங்கை மீறியதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குகளும் பதிவு செய்தனர். அபராதமும் விதிக்கப்பட்டது. பல இடங்களில் வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு சென்றனர்.

    காலை 10 மணிக்கு பிறகு வெளியில் வந்த வாகனங்களை மெயின் ரோட்டில் மடக்கிய போலீசார் அந்த வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்தனர். இதில் மருத்துவ காரணங்களுக்காக செல்லும் வாகனங்களை மட்டும் விடுவித்தனர். மற்ற வாகனங்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

    காலை 10 மணிக்கு மேல் விற்பனையில் ஈடுபட்ட கடைகளையும் கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அரசின் நடவடிக்கைக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

    ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக சாலைகளில் காலை 10 மணிக்கு பிறகு பொதுமக்களின் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது.

    வருகிற திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் இ-பதிவு நடைமுறை மீண்டும் அமலுக்கு வருகிறது. வெளி மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது.

    இதே போல் திருமணம், முக்கிய உறவினர் இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய நிகழ்வுகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள், உள்ளூரில் பயணம் செய்பவர்களுக்கும் இ-பதிவு முறை வருகிற திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் (https://eregister.tnega.org) என்ற இணையத் தளத்தில் பதிவு செய்து அதன் ஆவணத்தை வைத்திருந்தால் போதும்.

    Next Story
    ×