search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மருந்துகடையில் பதுக்கிய 42 குப்பி ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல்- உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

    கோவில்பட்டி:

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இதனை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. ஆங்காங்கே கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் மேட்டுகாளியம்மன் கோவில் தெரு பகுதியில் தனியார் காம்ப்ளக்சில் செயல்பட்டு வரும் மொத்த மருந்து விற்பனை கடை ஒன்றில் ரெம்டெசிவிர் மருந்து பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரெம்டெசிவிர் மருந்து 42 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையெடுத்து கடையின் உரிமையாளர் காந்திநகரைச் சேர்ந்த சண்முகம், அவரது சகோதரர் கணேசன் இருவரையும் போலீசார் கைது செய்து 42 ரெம்டெசிவிர் குப்பிகளை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் நெல்லை, மதுரையில் ரூ16 ஆயிரத்துக்கு ரெம்டெசிவிர் மருந்தினை வாங்கி வந்து ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த மருந்தினை மதுரை, நெல்லையில் யார்- யாரிடம் வாங்கினார்கள்? என்பது குறித்தும், இதன் பின்னால் இருக்கும் கும்பல் குறித்தும் போலீசார் இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×