search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கிற்கு பின்னரும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

    கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    ராமநாதபுரம்:

    கொரோனா என்ற கொடிய அரக்கனை வீழ்த்த மக்கள் வீடுகளில் தனித்து இருப்பதுதான் ஒரே வழி என்று மத்திய, மாநில அரசு கடந்த ஆண்டு மார்ச் 25-ந் தேதி ஊரங்கு பிறப்பித்தது.

    அரசு தரப்பில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தொடர்ந்து அறிவித்த நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்பை கடை பிடிக்காத நிலை தொடர்ந்து வருகிறது.

    வெறியுடன் மக்களை பலி வாங்கி வரும் கொரோனா தொற்று ஊரடங்கிற்கு பின்னரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையிலும் மக்கள் அலட்சியமாக இருந்து வருவது புரியாத புதிராக உள்ளது.

    ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும், விதிமுறைகளை கடைபிடிக்காத மக்கள் மீது மாவட்ட நிர்வாகம் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 47 ஆன நிலையில் தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 333 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் நேற்று வரை 10 ஆயிரத்து 933 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 9 ஆயிரத்து 265 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 521 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளை அதிகரிக்காமல், கட்டுப்பாடுகளை அதிகரித்தால்தான் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும். நாள் தோறும் புதிதாக 200-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

    ராமநாதபுரம் அரண்மனை பகுதி, சந்தைத்திடல், படடணம்காத்தான் பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் சமூக இடைவெளியின்றியும், முக கவசம் அணியாமல் மக்கள் அலட்சியமாக வெளியே வருகின்றனர்.

    குறைந்தபட்சம் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம். இனி வரும் நாட்களில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்ட நிலையிலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் இதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நோய் தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, உயிர்ப்பலி எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முடியும்.


    Next Story
    ×