search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 13 கட்சிகள் பங்கேற்பு

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு அமைந்த நிலையில் தற்போது அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடு இருந்தாலும் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. நேற்று ஒரேநாளில் மட்டும் 30 ஆயிரத்து 355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை 14 லட்சத்து 68 ஆயிரத்து 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் மேற்கொண்டு சிகிச்சைக்கு வருபவர்கள் ஆஸ்பத்திரி வாசலிலேயே ஆம்புலன்சில் காத்திருக்கிறார்கள்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ்களில் காத்திருந்த கொரோனா நோயாளிகள் 6 பேர் சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்துபோன காரணத்தால் ஆம்புலன்சிலேயே துரதிருஷ்டவசமாக உயிரிழந்தனர்.

    இதேபோல் தமிழகத்தின் பல ஊர்களில் ஆஸ்பத்திரிகளில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் பலர் பரிதவிக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இது மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆக்சிஜன் சிலிண்டர்கள்

    கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய தற்காலிக ஆஸ்பத்திரிகளும் மண்டபங்களில் உருவாக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளும் அதிகளவில் போடப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் வீதி வீதியாக காய்ச்சல் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவற்றை கண்காணிப்பதற்காக குழுக்களையும் உருவாக்கி உள்ளது. அவர்கள் மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதே கொரோனா தடுப்பிற்காக பல்வேறு கருத்துக்களை அப்போது இருந்த அரசிடம் வலியுறுத்தி வந்தார். அதில் ஒன்று தான் அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு உடனே கூட்ட வேண்டும் என்பதாகும்.

    இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு அமைந்த நிலையில் தற்போது அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அவர்களின் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து முடிவு செய்ய உள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை முன்னிட்டு அதை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் முதல்- அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சி சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம் ஆகிய 13 கட்சிகள் சார்பில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    ஒவ்வொரு கட்சி சார்பிலும் 2 எம்.எல்.ஏ.க்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

    Next Story
    ×