search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகாரிகள் ‘ சீல்’ வைத்த போது எடுத்த படம்.
    X
    அதிகாரிகள் ‘ சீல்’ வைத்த போது எடுத்த படம்.

    கொரோனா விதிமுறைகளை மீறிய பனியன் நிறுவனத்திற்கு சீல்

    பெருமாநல்லூர் அருகே கொரோனா விதிமுறைகளை மீறிய பனியன் நிறுவனத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். காங்கேயம்அருகே நூல் மில்லுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
    பெருமாநல்லூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பனியன் நிறுவன ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, பெருமாநல்லூர் ஏ.டி. காலனி அருகே தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இந்த பனியன் நிறுவனத்துக்குள் உள்ள விடுதியில் தங்கி இருக்கும் 170 பேருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், 21 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள், அவினாசி மகராஜா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்திற்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பனியன் நிறுவனத்தில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த அவினாசி தாசில்தார் நந்தகோபால், நில வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அதிகாரி பார்த்தீபன் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பந்தபட்ட பனியன் நிறுவனத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

    காங்கேயம் அருகே பெருமாள்மலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நூல் மில் செயல்பட்டு வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நூல்மில்லில் பணிபுரியும் வடமாநிலங்களை சேர்ந்த 4 பேருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் இங்கு பணிபுரியும் 14 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் நூல்மில் வளாகத்திற்குள் இருந்த விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இந்த நூல்மில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து காங்கேயம் தாசில்தார் சிவகாமி, வருவாய் ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் நேற்று காலை 11 மணியளவில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த மில் கொரோனா தொற்று தொடர்பான அரசின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி இயங்கியதாக அந்த மில்லை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
    Next Story
    ×